சதுரகிரி மலை ரகசியங்கள்

Sathuragiri malai Sivan

உலகம் அனைத்தும் அந்த சிவனின் படைப்பாகும். தமிழர்கள் வழிபடும் சித்தர் பரம்பரைக்கு முதல் குரு மற்றும் ஆதிசித்தனாக இருப்பவர் சிவபெருமான் ஆவார். தங்களின் குருநாதரான சிவபெருமானுக்கு சித்தர்கள் பலரும் கோவில் அமைத்து வழிபட்டிருக்கின்றனர். அப்படி இன்றும் அருவமாக சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படும் பல அற்புத மூலிகைகள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியான “சதுரகிரி மலையில்” இருக்கும் “அருள் மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமி” திருக்கோவிலை பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Sathuragiri malai

சதுரகிரி மலை தல வரலாறு

நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் இப்பகுதிக்கு சதுரகிரி என பெயர் ஏற்பட்டது. இந்த சதுரகிரி வனப்பகுதி மொத்தம் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. புராணங்களின் படி இங்கு வாழ்ந்த பச்சைமால் எனும் இடையர் குல வாலிபன் தனது மனைவி சடைமங்கையுடன் வாழ்ந்து வந்தான். சடைமங்கை தினமும் பசும்பாலை தனது மாமனாரிடம் கொடுத்து விட்டு வருவது வழக்கம். அப்படி ஒருமுறை அவள் பசும்பாலை கொண்டு செல்லும் வழியில் ஒரு துறவி அந்த பாலை தனக்கு குடிக்க தருமாறு கேட்டார். சடைமங்கையும் கொடுத்தாள். இப்படி தினமும் அந்த துறவிக்கு பசும்பால் கொடுத்துவருவதை அறிந்த அவள் கணவன் பச்சைமால் அவளை அடித்து துரத்திவிட்டான், இதையறிந்த அந்த துறவி சடைமங்கையை, சடதாரி எனும் பெயர்கொண்ட காக்கும் தெய்வ சிலையாக மாற்றிவிட்டு மறைந்தார்.

தனது தவறை உணர்ந்த பச்சைமால் அன்று முதல் இங்கு தவமிருக்கும் சித்தர்களுக்கு பால் தானம் செய்து வந்தான். ஒரு முறை சிவபெருமான் ஒரு துறவி வேடத்தில் சிவபூஜைக்கு பால் கறக்கப்படும் பசுமாட்டின் பாலை கறந்து குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட பச்சைமால் துறவியின் தலையில் தனது கோல் கொண்டு அடித்தான். அப்போது சிவன் தனது உண்மை வடிவில் தோன்றி அனைவர்க்கும் கட்சி தந்தார். பச்சைமாலுக்கு மோட்சம் அளித்து சித்தர்களின் வேண்டுகோளின் படி இம்மலையிலேயே மகாலிங்கம் என்ற லிங்கமாக தோன்றினார். இன்றும் இந்த லிங்கத்தின் தலை பகுதியில் அடிபட்ட வடுவிருப்பதை காணலாம்.

Sathuragiri malai

இந்த சதுர கிரி மலையில் பல லிங்க கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் சில சித்தர்கள் ஸ்தாபித்ததாகவும் இருக்கின்றன. அகத்திய சித்தர் இந்த மலையில் தங்கி தவமியற்றிய போது ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்துள்ளார். பிற்காலங்களில் சுந்தரானந்த சித்தர் அகத்தியர் பூஜித்த அந்த லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வந்ததால் பிற்காலங்களில் அந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்” என அழைக்கப்படலாயிற்று.

- Advertisement -

இங்கு “சந்தன மகாலிங்கம்” கோவில் இருக்கிறது. பார்வதி தேவி இந்த லிங்கத்தை சந்தனம் கொண்டு பூஜித்து சிவனின் ஒருபாதியாகும் அர்த்தநாரீஸ்வர உருவத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்தன லிங்கத்தை சட்டைநாதர் சிதறும் வழிபட்டுள்ளதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

Sathuragiri malai

சதுரகிரி மலை ஏறும் வழியில் ரெட்டை லிங்க கோவில் இருக்கிறது. ராமதேவர் எனும் சித்தர் இந்த ரெட்டை லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று தொலைவில் “தவசி பாறை” என்ற ஒரு இடம் இருக்கிறது. இப்பகுதியில் இருக்கும் நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. பார்வதி தேவி இப்பகுதிக்கு வந்த போது, உடன் வந்த சிவலோக பணிப்பெண்கள் இத்தீர்த்தத்தில் நீராடும் போது மஞ்சள் தேய்த்து குளித்ததால், இங்கிருக்கும் நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் என கூறுகிறார்கள்.

சதுரகிரி மலை சிறப்பு

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களை சேர்ந்தது தான் இந்த சதுரகிரி மலை. வனங்களும், தூய்மையான அருவிநீர் மற்றும் பல அற்புத மூலிகைகளை கொண்ட பகுதியாக இந்த சதுரகிரி மலை இருக்கிறது. இதன் காரணமாக பழங்காலந்தொட்டே இந்த சதுரகிரி மலை சித்தர்களின் இருப்பிடமாக இருந்து வந்திருக்கிறது. வருடத்திற்கொருமுறை இந்த சதுரகிரி மலை பாதயாத்திரை மேற்கொண்டு, இங்கிருக்கும் தீர்த்தங்களில் நீராடி, சிவபெருமானை வழிபடுவதால் எப்பேர்ப்பட்ட உடல்நலக்குறைபாடுகளும் நீங்குவதாக பல வருடங்கள் சதுரகிரி யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் அனுபவ வாக்குமூலமாக இருக்கிறது.

Sathuragiri malai

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் சதுரகிரி யாத்திரை மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலை பாதயாத்திரை மற்றும் கிரிவலம் வந்து சிவனை வழிபடுகின்றனர். மகாசிவராத்திரி அன்று இங்கிருக்கும் அனைத்து லிங்க கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திருமணம், குழந்தை பேறு, நோய்கள் நீங்க, தொழில் வியாபாரம் மேம்பட என பலவிதமான கோரிக்கைகள் சதுரகிரி யாத்திரை மேற்கொண்டு சிவனை வழிபடுவதால் நிறைவேறுவதாக கூறுகிறார்கள். இன்றும் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் வடிவிலும், அருவமாகவும் சித்தர்கள் வாழ்வதால் இங்கு வந்து வழிபாடும் போது அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதங்களும் கிடைக்கிறது.

Sathuragiri malai

கோவில் அமைவிடம்

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரிலிருந்து சற்று தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த சதுரகிரிக்கு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும், மதுரை மற்றும் விருதுநகரிலிருந்தும் பேருந்து வாடகை வண்டி வசதிகள் இருக்கின்றன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சதுரகிரியில் இருக்கும் அனைத்து கோவில்களின் நடைகளும் திறந்திருக்கும்.

கோவில் முகவரி

அருள்மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில்
சதுரகிரி
விருதுநகர் மாவட்டம் – 626 132

தொலைபேசி எண்

04563 288155

04563 293155

இதையும் படிக்கலாமே:
மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sathuragiri temple details in Tamil. We also have Sathuragiri malai varalaru in Tamil or Sathuragiri  malai history in Tamil.