அர்ஜுனனின் அம்புகள் மட்டும் அபூர்வ சக்தி பெற்றதன் காரணம் தெரியுமா ?

Mahabharatham1

மகாபாரதப் போரில் பத்தாவது நாள்… ”பிதாமகர் பீஷ்மர் வீழ்ந்துவிட்டார்” எனும் செய்தியே கெளரவர் படைகளுக்கு கலக்கத்தைத் தந்தது. அடுத்தநாள் யார் தலைமையில், என்ன வியூகம் அமைத்துக் களம் காண்பதென கெளரவர்கள், துரியோதனன் தலைமையில் கூடி விவாதித் தார்கள். அப்போது பலரும் ஒருமித்த கருத்தாகப் பரிந்துரைத்தது ஆசார்யர் துரோணரைத்தான். துரோணரின் போர்த் திறமைகள், பிதாமகர் பீஷ்மரின் திறமைகளுக்கு நிகரானவை. தனுர் சாஸ்திர வித்தகர். பாண்டவ சேனைகள் ஆகட்டும், கெளரவ சேனைகள் ஆகட்டும், மகாபாரதப் போரில் முக்கியப் பங்கு வகிக்கும் பலருக்கும் போர்க்கலைக் கற்றுத் தந்த குரு துரோணர்தான். அதோடு அர்ஜுனன், அபிமன்யூ, பீமன் போன்ற பாண்டவ மகாரதர்களையும் சமாளிக்கும் உத்தியை அறிந்தவரும் அவரே.

Mahabharatham

துரியோதனன் துரோணரைப் பணிந்து, “இதுதான் வில்… இது அம்பு…, இது கதை… என எங்களுக்கு ஆதி முதல் ஆயுதங்களைக் காட்டிக் கொடுத்துக் கற்பித்த கடவுளே… இந்த சீடனின் சேனைக்குத் தலைமை தாங்கி எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள்” என வேண்டி நின்றான்.

அகம் குளிர்ந்த துரோணரும் துரியோதனனை ஆரத்தழுவி, “துரியோதனா… நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை எவனும் கொல்ல முடியாது. என் இறுதி மூச்சு உள்ளவரை உன்னையும், உன் சேனைகளையும் காத்து உன் வெற்றிக்கு வழி வகுப்பேன்” எனக் கூறி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பதினோறாவது நாள்.

துரோணர் தலைமையில் கெளரவர்கள் படை வியூகம் அமைக்கும் செய்தி பாண்டவர்களை வந்தடைந்தது. பாண்டவர்களுக்கு குரு மீது பக்தி அதிகம். துரோணருக்கும் பாண்டவர்கள் மீது அன்பும் கரிசனமும் இல்லாமல் இல்லை. குறிப்பாக தன் முதன்மை மாணவன் அர்ஜுனன் மீது கூடுதல் அன்பு உண்டு. மகனினும் மேலான சீடன் அல்லவா… எப்படி மறப்பார்..?

- Advertisement -

களத்தில் அர்ஜுனனும், துரோணரும் சந்தித்துக் கொண்டனர். அர்ஜுனன் உடனடியாக தன் தேரிலிருந்து இறங்கி குருவை வந்தனம் செய்தான். துரோணருக்கு பெருமகிழ்ச்சி. எதிரி நிலையெடுத்து நின்றாலும் குருபக்தி மாறாத தன் சிஷ்யனைப் பார்த்து பூரித்துப்போனார்.

Mahabharatham

போர் தொடங்கியது. ஒரு பக்கம் துரோணரை சமாளித்துக் கொண்டு, மறுபுறம் கெளரவ சேனைகளை துவம்சம் செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன். போர்க்களத்தில் அர்ஜுனன் கால சம்ஹார மூர்த்தியாகவே காட்சி அளித்தான்.

அர்ஜுனனின் காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளும் அஸ்திரங்களும் துரோணர் எய்வதை விட விரைவாகவும், அழிவைத் தருவதாகவும் இருந்தன. ஒரு கட்டத்தில், அர்ஜுனனின் தாக்குதலை முனைமுறிக்கும் வகையில், துரோணருக்குப் பக்கபலமாக கெளரவப் படையின் மகாரதர்களான கர்ணன் , துரியோதனன், ஜெயத்ரதன், சகுனி, அஸ்வத்தாமன், சல்லியன் அனைவரும் ஒன்றுகூடி வந்தார்கள். இருப்பினும் அர்ஜுனனின் வேகத்தைத் தடுக்கமுடியவில்லை. அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். கர்ணனுக்கு கோபம் கொப்பளித்தது.

ஆச்சர்யத்தையும் கோபத்தையும் அடக்க முடியாத துரியோதனன், குரு துரோணரிடம், “குருதேவா, நீங்கள் எங்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரிதான் வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், இந்த அர்ஜுனனின் அம்புகளும் அஸ்திரங்களும் மட்டும் இவ்வளவு வேகமாகச் சீறிப் பாய்கின்றனவே… எங்கள் அம்புகள் எல்லாம் ஏன் இவ்வளவு வேகமாக இலக்குகளைத் தாக்குவதில்லை” எனக் கேட்டான்.

ஒரு மெல்லிய புன்முறுவல் பூத்தார் துரோணர். “சிரிக்காதீர்கள் குருவே… விடையளியுங்கள்…” என துரியோதனன் வேண்டினான். தன் சிறந்த சிஷ்யன் ஒருவனின் வீரத்தை, தலைசிறந்த பிற வீரர்கள் பாராட்டுகிறார்கள் என்றால் எந்த குருவுக்குத்தான் பெருமையாக இருக்காது..?

Mahabharatham

“உங்களைப் பொறுத்தவரை வில்லும் அம்பும் ஒரு போர்க்கருவி. ஆனால், அர்ஜுனனைப் பொறுத்தவரை அது அவனுள் ஒரு பகுதி. அவன் எய்யும் அம்புகள் எல்லாம் அவன் உயிரில் ஒரு பகுதி. நாமே நேரடியாகச் சென்று ஒருவனைத் தாக்கினால் எப்படித் தாக்குவோமோ, அப்படித்தான் அவன் உயிரின் அங்கங்களான அம்புகளும் அஸ்திரங்களும் பாய்கின்றன. அவன் வில் பயிற்சி செய்வதே ஒரு தவம்தான். அவன் ஒவ்வோர் அம்பை எய்யும்போதும், தன் உயிரின் ஒரு பகுதியையே எய்கிறான். அந்த அளவுக்குத் தனுர் வேதத்தைத் தன்னுள் ஆழ்ந்து உணர்ந்திருக்கிறான்.

அதோடு, வனவாசத்தில் இருந்தபோது அவன் மேற்கொண்ட தவத்தின் வலிமையும், சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவின் ஆசிகளும் ஒன்று சேர்ந்ததால் அவன் அம்புகள் எல்லாம் அழிவைக் கொடுக்கும் மகா ஆயுதங்களாக மாறிப் பாய்கின்றன. நமக்கு எதிராக அவன் பாசுபதாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்ற தெய்விக, மகா பிரளய அஸ்திரங்களைப் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வோம்” என்றார் துரோணர்.

இதையும் படிக்கலாமே:
மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை தெரியுமா ?

“நீங்களும் தாத்தா பீஷ்மரைப் போல அவர்கள் புகழ் பாடாமல் நம் சேனைகளைக் காப்பாற்றுங்கள் துரோணரே” எனக் கடுகடுத்தான் துரியோதனன். ‘செவிடன் காதில் ஊதிய சங்கு… கேட்கவா போகிறது’ என துரோணரும் அர்ஜுனனின் திறமைகளை பார்த்து வியந்தபடியே போர் புரிந்துகொண்டிருந்தார்.

இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீக கதைகளை படிக்க தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.