பங்குனி மாதம் சீதாதேவி பூமியிலிருந்து அவதரித்த இந்த நாள் இவ்வருடம் திங்கட்கிழமை மார்ச் 24ஆம் தேதி வரப் போகிறது. பொறுமையின் அடையாளமாக இருக்கும் சீதாப்பிராட்டியார் தன் கணவன் ராமபிரானோடு பதிவிரதையாக எப்படி ஒற்றுமையாக இருந்தாரோ, அதே போல பெண்களும் தன் கணவனுடன் சண்டை, சச்சரவில்லாமல் நீண்ட காலம் ஒற்றுமையுடன் இருக்க விரதமிருந்து அன்றைய நாள் சீதா தேவியை எப்படி வழிபட வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.
பொறுமை, அர்ப்பணிப்பு, தியாகம், அடக்கம், தாய்மை அனைத்தும் ஒருசேர கொண்டு இருப்பவள் சீதாதேவி. அன்னை பூமாதேவியின் புதல்வியாக தேவி இருக்கின்றாள். இவளின் அருள் கிடைக்க எல்லா பெண்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சீதாவின் அருள் இருந்தால் கன்னி பெண்களுக்கு ராமபிரான் போல அழகும், பண்பும், குணமும் நிறைந்த நல்ல கணவன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அதே போல கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல், கருத்து வேறுபாடுகள் இருந்தால் இந்த விரதம் இருந்து வழிபட்டால் புரிதல் உண்டாகி, ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்.
சீதா தேவி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
சீதாதேவி அவதரித்த இந்த நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் கணவனுக்காகவும், கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமையவும் விரதம் இருக்க வேண்டும். காலையிலேயே எழுந்து குளித்து முடித்து சுத்தபத்தமாக பூஜை அறையை தயார் செய்ய வேண்டும். சீதா ராமனுடன் ஹனுமரும், லக்ஷ்மனும் இருக்கும் படத்தை மஞ்சள் தடவிய மனையில் வைக்க வேண்டும்.
படத்திற்கு துளசி மாலை தயார் செய்து அணிவிக்க வேண்டும். சந்தனத்துடன் பன்னீர் கலந்து பொட்டு வைத்து குங்குமம் வைக்க வேண்டும். சீதா தேவிக்கு நைவேத்தியம் படைக்க இனிக்க இனிக்க சர்க்கரை பொங்கல் தயார் செய்து வாழை இலையில் படையுங்கள். பின் சுண்டல், பானகம், நீர்மோர், இளநீர், பாயாசம், தயிர் சாதம், பால், பழங்கள் போன்றவற்றை வைக்கலாம். நம்மால் என்ன முடியுமோ அதை தயார் செய்து வைத்தால் போதும். பின்னர் பூஜையில் இரண்டு குத்துவிளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
சீதாதேவியின் சகஸ்ரநாமம் சொல்லி மணம் மிகுந்த புஷ்பங்களால் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் சீதாராமன் கதையை வாசிக்க வேண்டும். “ஸ்ரீ ராம ஜெயம்” என்னும் மந்திரத்தை 108 முறை எழுதலாம். மாலையில் ஹனுமன் கோவிலுக்கு சென்று அனுமரை வழிபடலாம். ராமர் கோவிலுக்கு சென்று ராமரையும், சீதையையும் வழிபட்டு வர வேண்டும். அவர்களுக்கு துளசி மாலை சாற்றி வேண்டுதல் வையுங்கள். கோவிலில் மகாபிஷேகம் பார்த்து தரிசிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு வாங்க ஸ்தல சயண பெருமாள் கோவில்
கோவிலில் சீதாராம கதைகளை சொல்லுவார்கள். அதையும் நீங்கள் கேட்டு ரசிக்கலாம். இப்படி அன்றைய தினத்தை சீதாதேவி வழிபாடு செய்து விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு தன் மனதுக்கு ஏற்றவாறு நல்ல கணவனும், கட்டிய கணவன் மனம் மாறி தன் மனதுக்கு பிடித்த படியும் கிடைப்பார்கள் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள், நீராகாரங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் அனுஷ்டிக்கலாம், தவறில்லை.