இந்த உலகத்தை காக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் மகாவிஷ்ணு என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக ஏகாதசி திதி திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு விதமான பெயர்களும் உண்டு. அந்த ஏகாதசியில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் ஒவ்வொரு விதமான பலன்களும் கிடைக்கும். அந்த வகையில் மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை ஆமலகி ஏகாதசி என்று கூறுவது உண்டு. அன்றைய தினத்தில் நாம் ஒரே ஒரு மரத்தை வழிபாடு செய்தோம் என்றாலே பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்புடன் வாழ முடியும். அந்த வழிப்பாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய நாட்களில் அந்த தெய்வத்திற்குரிய மரத்தை நாம் வழிபாடு செய்தாலே நமக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மரங்கள் சிறப்பு வாய்ந்த மரங்களாக திகழும். அந்த மரங்களை அறிந்து கொண்டு அதற்குரிய நாளில் முழுமனதோடு நம்மால் இயன்ற முறையில் வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். அந்த வகையில் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த ஒரு மரமாக திகழ்வதுதான் நெல்லி மரம். இந்த நெல்லி மரத்தை நாம் வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளை பெற முடியும்.
மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி நாளை ஆமலகி ஏகாதசி என்று கூறுகிறோம். ஆமலகி என்றால் நெல்லிக்கனி என்று அர்த்தம். அதனால் இந்த ஏகாதசி அன்று நாம் நெல்லி மரத்தை வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களும் அழிந்த பிறகு விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்டு பூமியில் விழுந்த ஒரு நீர் துளி தான் நெல்லி மரமாக வளர்ந்தது என்று புராணங்களில் கூறப்படுகிறது. அதனால் நெல்லி மரத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் பரிபூரணமாக குடியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
நெல்லிக்கனியை தானமாக தருவதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் கிடைக்கும். அதே போல் நெல்லிக்கனியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். இப்படி ஐஸ்வரியம் அதிகரிப்பதற்கும், செல்வ செழிப்பு உயர்வதற்கும் நெல்லிக்கனி என்பது நமக்கு உறுதுணையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நெல்லி மரத்தை இந்த மாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி வரக்கூடிய மார்ச் மாதம் 12ஆம் தேதி நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
காலையிலேயே நெல்லி மரத்திற்கு அடியில் தண்ணீர் தெளித்து பச்சரிசி மாவினால் கோலம் போட்டு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு பின்வரும் இந்த பாசுரத்தை முழுமனதோடு ஒரு முறை மட்டும் படித்து நெல்லி மரத்தை வலம் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
பாசுரம்
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
இதையும் படிக்கலாமே:வேண்டிய வரம் கிடைக்க துர்க்கை வழிபாடு
மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி நாளன்று இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருளால் செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.