பைரவர் வழிபாடு என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அவருக்குரிய திதியான அஷ்டமி திதி தான். அஷ்டமி திதியில் தான் பலரும் பைரவரை வழிபாடு செய்வார்கள். ஆனால் வைரவரை வழிபாடு செய்வதற்கு அதைவிட மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றொரு நாள் இருக்கிறது. அதுதான் பௌர்ணமி திதி வரக்கூடிய நாள். பௌர்ணமி தோறும் காலபைரவரை நாம் சொர்ண ஆகர்ஷண பைரவராக வழிபாடு செய்யும்பொழுது சகல விதமான செல்வங்களும் நமக்கு கிடைக்கும். நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தரித்திரமும் விலகி ஓடும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வ செழிப்புடன் வாழ வழிபாடு
கால பைரவர் சனீஸ்வர பகவானின் குருவாக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட குருவை குரு பூர்ணிமா நாளன்று நாம் வழிபாடு செய்ய ஆரம்பித்தோம் என்றால் அவரின் அருளால் நம் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறலாம். குரு பூர்ணிமா வரக்கூடிய நாளில் குருவாக இருக்கக்கூடியவர்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் பைரவரை சொர்ண ஆகர்ஷன பைரவராக நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு செல்வ செழிப்பும் உயரும்.
இந்த வழிபாட்டை நாம் இரவு எட்டு மணிக்கு செய்ய ஆரம்பிக்க வேண்டும். பலரது வீட்டிலும் பைரவரின் படம் என்பது இருக்காது. ஒரு சில வீட்டில் சொர்ண ஆகர்சன பைரவரின் படம் இருக்கும். அந்த படம் இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து சந்தனம், ஜவ்வாது, புனுகு போன்றவற்றை கலந்து வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு அவருக்கு வெள்ளை அல்லது சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
இயன்றவர்கள் 8 அகல்விளக்கில் நெய் ஊற்றி அவருக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளலாம். இயலாதவர்கள் ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். பைரவரின் படம் இல்லாதவர்கள் பூஜையில் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை சுத்தம் செய்து அதில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு ஒரு தாம்பாள தட்டை வைத்து தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது சொர்ண ஆகர்ஷண பைரவரை மனதார நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்தையே சொர்ண ஆகர்ஷன பைரவராக நினைத்து இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்யும்பொழுது சொர்ணாகர்ஷண பைரவருக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்கலாம். அதுவும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை வைப்பது கூடுதல் சிறப்பை தரும். இப்படி அனைத்தையும் தயார் செய்து விட்டு துர்க்கை சித்தர் அருளிய ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவர் அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும். இந்த அஷ்டகம் “தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்” என்று தொடங்கும். இந்த அஷ்டகத்தை 18 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இப்படி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இரவு எட்டு மணிக்கு எட்டு தீபங்களை ஏற்றி வைத்து 18 முறை சொர்ண ஆகர்ஷண பைரவரின் அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது பௌர்ணமிகள் செய்ய வேண்டும். ஒன்பதாவது பௌர்ணமி அன்று நெய்வேத்தியமாக அவல் பாயாசத்தை வைக்க வேண்டும். இப்படி நாம் பைரவருக்கு பௌர்ணமி பூஜை செய்யும் பொழுது நம்மை நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்டிருந்த வறுமையில் இருந்து விலக முடியும். அதோடு மட்டுமல்லாமல் அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் பெற முடியும். தொடர்ச்சியாக பௌர்ணமி பூஜை செய்பவர்களுக்கு தங்கள் வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷமும் நிரந்தரமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: கேட்டதை கொடுக்கும் சந்திர பூஜை
அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வதற்கு உகந்த தினமாக கருதக்கூடிய பௌர்ணமி தினத்தன்று காலபைரவரின் அம்சமாக திகழக்கூடிய சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்து அனைத்து விதமான வறுமைகளில் இருந்தும் நீங்கி சகல சந்தோஷத்துடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.