ஆவணி மாதம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே அதைத் தொடர்ந்து பல பண்டிகை நாட்களும் திருவிழாக்களும் வர தொடங்கி விடும். கடவுள்களில் எப்படி விநாயகர் முழுமுதற் கடவுளாக இருக்கிறாரோ அதே போல் நாம் வணங்கப்படும் வழிபாடு பூஜைகளிலும் இவரே முழு முதலாக இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று. அப்படியான தினத்தில் அவரை நினைத்து நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபம் நம்முடைய வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐஸ்வர்யத்தை தரும் தீபம்
விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. வெள்ளிக்கிழமை மதியமே சதுர்த்தி திதி துவங்கி விட்டாலும் சூரிய உதயத்தின் போது இருக்கும் திதியே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சிறப்பு. இந்த விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமை அன்று அவரவரின் நேரத்திற்கு தகுந்தாற் போல் வழிபாடு செய்து கொள்வார்கள் பெரும்பாலும் பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.
அப்படி செய்ய முடியாதவர்கள் நாளைய தினம் மதியம் 3 மணிக்குள் வணங்கி விட வேண்டும் அதன் பிறகு சதுர்த்தி திதி முடிந்து விடுகிறது. ஆனால் இந்த தீபத்தை நாளை முழுவதிலும் எப்பொழுது உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் ஏற்றலாம். அதே போல் இந்த தீபத்தை நீங்கள் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யும் போதும் ஏற்றலாம் அல்லது மாலை நேரத்திலும் ஏற்றலாம் அது உங்கள் விருப்பம். இந்த தீபத்தை ராகுகால எமகண்ட நேரத்தில் மட்டும் ஏற்றக் கூடாது இதில் கவனமாக இருங்கள்.
இந்த தீபம் ஏற்ற நமக்கு இரண்டே பொருள் தான் தேவை. ஒன்று புதிதாக வாங்கிய ஒரு மண் அகல் மற்றொன்று ஒற்றை எண்ணிக்கையிலான அரச இலை, அது ஐந்து ஏழு ஒன்பது என உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு தாம்பாள தட்டை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் அரச இலையும் சுத்தம் செய்து அதற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். விளக்கும் இதே போல செய்ய வேண்டும்.
விநாயகர் படத்திற்கு முன்பாகவோ அல்லது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் விநாயகருக்கு முன்பாகவும் இந்த தட்டை வையுங்கள். அதை சுற்றி அரச இலையை வைத்து விட்டு நடுவில் அகல் விளக்கை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி விநாயகருக்கு முன்பாக வைத்து உங்களுடைய குறைகள் எதுவும் அது நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அது திருமண தடை, குழந்தை பாக்கியம், கடன் தொல்லை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். அதன் பிறகு குளிர விடுங்கள் அவ்வளவு தான். நாளைய தினத்தில் நீங்கள் செய்ய வேண்டியது. ஆனால் இந்த தீபம் உங்களுக்கு பெரும் பலனை பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது. காரணம் அரச இலையானது விநாயகருக்கு மிகவும் உகந்தது அரச மரத்தடி விநாயகர் என்றாலே தனி சிறப்பு வாய்ந்தவர்.
அத்தகைய அரச இலை தீபத்தை நாளைய தினம் ஏற்றும் பொழுது உங்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். அதே போல் நாளைய தினம் வீட்டில் வழிபாடு செய்தாலும் கூட ஆலயம் சென்று விநாயகரை தரிசனம் செய்வது சிறப்பு. அதிலும் அரச மர விநாயகரை வழிபாடு செய்ய முடிந்தால் மேலும் நல்ல பலன்களை பெறலாம்.
இதையும் படிக்கலாமே:பண விரயத்தை தடுக்கும் அடுப்பங்கரை புளி
என்ன தான் நாம் தினம் தினம் வழிபாடு செய்தாலும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய நாட்களில் செய்யும் பொழுது அதற்குரிய பலன் அதிகம். அதிலும் அவர்களுக்கே உகந்த பொருளை கொண்டு செல்லும் பொழுது அதற்கான பலனை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அப்படி அதிக பலனை தரக்கூடியது தான் இந்த தீபம் நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினத்தில் ஏற்றி நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.