இன்றைய தினம் ஆடி18, மதியத்தில் இருந்து பூச நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டது. மாலை 4:56 இல் இருந்து அமாவாசை திதியும் ஆரம்பித்து விட்டது. மேலும் இன்றைய தினம் சனிக்கிழமை. இவை அனைத்தும் ஒரு சேர வருவது என்பது மிகவும் அரிதான ஒன்று. அப்படி அரிதான இந்த நேரத்தில் நாம் குபேர பகவானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு பணவரவு ஏற்படுவதில் எந்தவித தடைகளும் இருக்காது. அந்த குபேர பூஜையை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குபேர பகவானுக்குரிய கிழமையாக திகழக்கூடியது வியாழக்கிழமை என்றாலும் இப்படி ஆடி பெருக்கு இருக்கக்கூடிய நாளில் பூச நட்சத்திரம் சேர்ந்து வருகிறது என்னும் பட்சத்தில் அது மிகவும் சிறப்புக்குரியது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் நாம் குபேர பகவானை முழு மனதோடு பூஜை செய்து வழிபாடு செய்தால் அதற்கான பலன் அதிகமாகவே கிடைக்கும்.
மாலை 6 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இதற்கு நம்முடைய வீட்டில் குபேரரின் படமோ சிலையோ இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குபேர விளக்கு வைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த குபேர விளக்கிற்கு நெய் ஊற்றி பச்சை நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக குபேர நாணயம் இருந்தால் 108 குபேரன் நாணயத்தை வைத்து குபேரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
குபேர நாணயம் இல்லாதவர்கள் தங்க நிறத்தில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயங்களை 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து வைத்து ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் சத்தம் வரும் வரை ஒவ்வொரு நாணயமாக போட்டு “ஓம் குபேராய நமஹ” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். பிறகு குபேரருக்கு நெய்வேத்தியமாக பாசிப்பருப்பு நெய் ஊற்றி பாசிப்பருப்பு பாயாசம் அல்லது பாசிப்பருப்பை வைத்து ஏதாவது ஒரு இனிப்பு வகையை செய்து வைக்க வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு குபேரனின் அருளால் செல்வ வளம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
குபேரரின் சிலை இல்லை படமும் இல்லை குபேர விளக்கும் இல்லை என்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு ஒரு தாம்பாளத்தில் முன்பு சொன்னது போல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். ஐந்து ரூபாய் நாணயம் இல்லாத பட்சத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை கூட இந்த அர்ச்சனைக்காக பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே கண் திருஷ்டி கழிய ஆடி அமாவாசை நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த குபேர வழிபாட்டை இன்றைய தினம் மறவாமல் செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணவரவு என்பது அதிகரித்து செல்வவளத்துடன் வாழ்வார்கள்.