சேமியா அடை தோசை செய்முறை

semiya adai dosai
- Advertisement -

காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட காலை உணவாக பலரும் அதிகமாக எடுத்துக் கொள்வது இட்லி தோசை தான். ஒரு முறை மாவு அரைத்து விட்டால் ஒரு வாரம் வரை தோசையை ஊற்றி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தான் நினைப்போம். அப்படி சாப்பிட்டு போர் அடித்தவர்கள் சேமியாவை வைத்து எப்படி அடை தோசை செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

பொதுவாக காலை உணவாக நாம் உட்கொள்ளும் சிற்றுண்டி மூலமாகத்தான் அன்றைய நாள் முழுதும் நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்று ஒரு கூற்று இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் காலையில் ராஜாவைப் போல் உண்ண வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் இரவு முழுவதும் எந்தவித உணவும் உண்ணாமல் இருப்பதால் காலையில் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு ஆரோக்கியமான உணவு வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சேமியா வறுத்தது – 200 கிராம்
  • ரவை – 200 கிராம்
  • அரிசி மாவு வறுத்தது – 200 கிராம்
  • தயிர் – 200 கிராம்
  • வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • மல்லி தலை – சிறிதளவு
  • புதினா – சிறிதளவு
  • மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
  • கறி மசாலாத்தூள் – 1 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைக்க வேண்டும். அதில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை போட்டு வதக்க வேண்டும். இது லேசாக வதங்கியதும் இதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு இதில் சேமியா, ரவை, அரிசி மாவு, கறி மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு, பொடியாக நறுக்கிய புதினா இலை, மல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து ஊறிய மாவு நன்றாக ஊறி இருக்கும். அப்பொழுது மறுபடியும் ஒரு முறை அடை ஊற்றும் அளவிற்கு மாவு பதமாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைக்க வேண்டும்.

- Advertisement -

தோசைக்கல் நன்றாக சூடானதும் அதில் அடை தோசை ஊற்றுவது போல் சிறிது கனமாக ஊற்றி அதை சுற்றி எண்ணையை ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும். தோசை நன்றாக வெந்த பிறகு அதை மறுபடியும் திருப்பி போட்டு அதை சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும். சுவையான சேமியா அடை தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: அடுப்பில்லா அவல் பாயாசம் செய்முறை

வித்தியாசமான முறையில் இப்படி அடை தோசை செய்து கொடுத்தால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவுமே இல்லாமல் அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும்.

- Advertisement -