சேனைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சா கறி சுவையை மிஞ்சிவிடும்! டேஸ்டியான சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது?

karunai-kilangu-fry1
- Advertisement -

சேனைக்கிழங்கு அல்லது கருணைக்கிழங்கு என்று கூறப்படும் இந்தக் கிழங்கு ரொம்பவே அற்புதமான ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. இதை நன்கு வேக வைத்து மசாலாக்கள் சேர்த்து வறுத்து எடுக்கும் பொழுது அதன் சுவை கரியையே மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமாக இருக்கும். வீட்டிலேயே இந்த கிழங்கை எப்படி கரி சுவையை மிஞ்சும் அளவிற்கு வறுவல் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

சேனைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு – 200 கிராம், கல் உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பட்டை, கிராம்பு – தலா 1, வெங்காயம் – ஒன்று, தக்காளி – 1, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் – தலா அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை விளக்கம்:
முதலில் 200 கிராம் அளவிற்கு சேனைக்கிழங்கை தோல் பகுதிகளை நீக்கி சுத்தம் செய்து உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு தண்ணீரில் ஒரு முறை அலசி சதுரம் சதுரமாக க்யூப் போல வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். நீங்கள் கல்லுப்பு சேர்க்கும் பொழுது கருணைக்கிழங்கு நாக்கில் அரிக்காமல் இருக்கும். 90% நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து தண்ணீர் இல்லாமல் நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய், கசகசா, சோம்பு, சீரகம், பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரொம்பவும் நைசாக அரைத்து விடக்கூடாது. ஒரு முறை சுற்றிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு நீங்கள் ஆற வைத்துள்ள சேனைக்கிழங்குகளை டீப் ஃப்ரை செய்யுங்கள். இதனால் சேனைக்கிழங்கு நல்ல மொறுமொறு தன்மையுடன் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பற்ற வையுங்கள். அதில் சேனைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். அதனுடன் ஒரு இணுக்கு கருவேப்பிலை மற்றும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்கி விடுங்கள். பின்னர் வறுத்து வைத்துள்ள சேனை கிழங்குகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து ஒருமுறை நன்கு பிரட்டி எடுத்தால் சுடச்சுட சூப்பரான கருணைக்கிழங்கு வறுவல் தயார்! இதே போல நீங்களும் செய்து அசத்துங்க.

- Advertisement -