செப்டம்பர் மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

september-rasi-palan
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரக அமைப்புகளின் படி நம்முடைய பொதுப் பலன்கள் அமையப் பெறுகிறது. 12 ராசிகளுக்கும் கடந்த மாதம் ஏற்ற இறக்கம் தரும் பலன்களே இருந்திருக்கும். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற்றத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிலவ வருடத்திய செப்டம்பர் மாத பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதங்களை அள்ளிக் கொடுக்கும் இனிய மாதமாக இருக்கிறது. இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த காரியங்கள் கூட இனி சுறுசுறுப்புடன் நடக்கத் துவங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். உங்களை சூழ்ச்சியால் முறியடிக்க நினைப்பவர்களை எளிதில் வென்று காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கனிவான பேச்சாற்றலால் நிறைய நன்மைகள் உண்டாக இருக்கிறது. பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சற்று கவனம் தேவை. பெண்களுக்கு நினைத்த பொருட்களை வாங்கி குவிக்கும் யோகம் உண்டு. இம்மாதம் உங்கள் மனக் கவலைகள் அகல மருந்தீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களை தர இருக்கும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரிய முயற்சிகளில் மீண்டும் ஈடுபட்டு வெற்றியை காண்பீர்கள். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட்டாலும், படிப்படியான முன்னேற்றம் நிச்சயம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இம்மாதம் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும். பெரியவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. இம்மாதம் நீங்கள் விநாயகர் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் தரும் பலன்கள் கிடைக்க இருக்கிறது. வருவது வரட்டும் என்று அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று செய்து கொண்டு இருப்பது நல்லது. எதிர்கால திட்டமிடலை ஒத்தி வைப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறையத் துவங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் பணவரவு சீராக அமையும். பழைய கடன் பாக்கிகளை கூட வசூல் செய்து விடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில தடைகள் ஏற்பட்டு பின்னர் வெற்றியை காணக் கூடிய யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ பெண்கள் முழு முயற்சி செய்வார்கள். புதுவரவு ஒன்று உங்களை நாடி வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைப்பது அப்படியே நடக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற தொலைதூரப் போக்குவரத்து தவிர்ப்பது நல்லது. பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடும் துணிவு பிறக்கும். சக போட்டியாளர்கள் உடன் ஆரோக்கியமான போட்டிகள் நிலவும். குடும்பத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை. ஈசனை திங்கட் கிழமைகளில் வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் நினைத்துப் பார்க்காத நேரத்தில் நினைத்துப் பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் தீரும். உங்கள் திறமையை வெளிக்கொணர வேண்டிய நேரம் இது. எனவே கூடுதல் பொறுப்புணர்வுடன் இருப்பது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக அமைய இருக்கிறது. பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் பேச்சில் இனிமை தென்படும். மனக்கவலைகள் அகன்று புதிய பொலிவுடன், புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணிக்க கூடிய வகையில் நன்மைகள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதை செய்ய வேண்டும் என்கிற தெளிவு பிறக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும் என்பதால் சற்று உடல் ரீதியான பிரச்சனைகள் தோன்றி மறையலாம். எனவே கூடுமானவரை ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமைக்கு குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல மாதமாக அமைய இருக்கிறது. உங்களை நோக்கி எத்தனை துயரங்கள் வந்தாலும் அனைத்தையும் மனோதிடத்துடன் எதிர் கொள்வீர்கள். பொருளாதார இழப்புகளை சரி செய்து முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்களுடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை அவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மேலிடத்திலிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு பக்தி அதிகரிக்கும். மனவலிமை பெற ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. நீங்கள் போராடி ஜெயிக்க நினைக்கும் சில விஷயங்களில் ஜெயம் உண்டாகும். தேவையான சமயத்தில் நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. வாழ்க்கையில் உங்களை முன்னேற்றிக் கொண்டு செல்லக்கூடிய வகையில் நட்பு வட்டம் விரிவடையும். பெண்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண உணவு கட்டுப்பாடு தேவை. கந்தனை வழிபட நன்மைகள் நடக்கும்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் தேவையில்லாத மன சங்கடங்கள் அகன்று உற்றார் உறவினர்களுடன் இணக்கம் ஏற்படும். உங்களை பாதியில் விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் அமையும். சுபஹ் காரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் யோகமுண்டு. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து பரஸ்பர ஒற்றுமை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் ஜெயம் உண்டாகும். உங்கள் மீது விழுந்திருந்த வீண் பழிகள் மறையும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பிரச்சினைகள் தீர வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புதிய நண்பர்களை சம்பாதிக்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அன்யோன்யம் பெருகும். குடும்பத்தில் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தடைகள் விலகி சிறப்பான முன்னேற்றம் காண இருக்கிறீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். தொழில்முறை பகைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள் தெரிய வந்து அவற்றை எளிதாக முறியடித்து காண்பிப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடங்கள் தீரும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய வல்லமை பிறக்கும் இனிய மாதமாக அமைய இருக்கிறது. உங்களால் முடியாது என்று சொல்லிய சில விஷயங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தடைகள் விலகி சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். சக போட்டியாளர்கள் உடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு தன்னிறைவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்பிற்கு உரிய பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறக்க உண்ணும் உணவில் சற்று கவனம் செலுத்துங்கள். குடும்ப பிரச்சனைகள் தீர சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான் வழிபாடு செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. உங்களுக்கு பகையாளிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் யோகமும் உண்டு. எடுக்கும் எல்லா முயற்சியிலும் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு நல்ல லாபம் காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழில் சூடு பிடிக்கத் துவங்கும். வியாபாரம் மந்தம் மாறி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பெண்களுக்கு அவ்வபோது உடல் ரீதியான பிரச்சனைகள் தோன்றி மறையும். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -