பிறக்கின்ற ஒவ்வொரு மாதமும் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்று தான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். இருப்பினும் சென்ற மாதங்களை பார்க்கும் பொழுது நாம் நினைத்தது நடக்காமல், ஏதாவது கஷ்டங்களை அனுபவித்து, தொட்ட காரியத்தில் வெற்றிகள் ஏற்படாமல் தடைப்பட்டு இருந்திருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் செப்டம்பர் மாதத்தில் வரக்கூடாது என்று நினைப்பவர்களும், செப்டம்பர் மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்களும் செப்டம்பர் முதல் நாள் செய்யவேண்டிய சிவ பூஜையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செப்டம்பர் மாதம் சிறப்பாக அமைய
செப்டம்பர் மாதம் என்பது ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்கள் இணைந்து வரக்கூடிய மாதமாக நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம் என்றாலும் செப்டம்பர் மாதம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளும் பொழுது இது சிவபெருமானுக்குரிய மாதமாகவே கருதப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தின் முதல் நாள் திங்கட்கிழமை பிறக்கிறது. திங்கட்கிழமை சிவபெருமான் வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக திகழ்வதால் இந்த மாதத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். அதிலும் குறிப்பாக செப்டம்பர் முதல் நாள் நாம் இந்த ஒரு எளிமையான பூஜையை செய்யும் பொழுது சிவபெருமானின் அருள் இந்த மாதம் முழுவதும் பரிபூரணமாக கிடைக்கும்.
செப்டம்பர் மாதத்தின் முதல் நாள் அன்று காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணிக்குள்ளோ அல்லது மாலை 5:30 மணியில் இருந்து இரவு 10:30 மணிக்குள்ளோ இந்த பூஜையை நாம் செய்யலாம். நம் வீட்டில் சிவலிங்கம் எந்த ஸ்வரூபத்தில் இருந்தாலும், அந்த சிவலிங்கத்திற்கு நம்மால் இயன்ற அபிஷேகங்களை செய்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். சிலை இல்லை படம் தான் இருக்கிறது என்பவர்கள் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஐந்து அகல் விளக்குகளை ஒரு தாம்பாள தட்டிலோ அல்லது இலையிலோ வைத்து கிழக்கு திசை பார்த்தவாறு சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த ஐந்து தீபங்களை ஏற்றும் பொழுதும் “சிவாய நம ஓம்” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே ஏற்ற வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு காய்ச்சிய பசும்பாலை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் இந்த வாசகத்தை 11 முறை முழு மனதோடு ஆத்மார்த்தமாக கூற வேண்டும்.
இவ்வாறு கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஏற்றிய தீபம் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு தீபத்தை குளிர வைத்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த பசும்பாலை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே: நிரந்தர வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்க
மிகவும் எளிமையான இந்த பூஜையை செப்டம்பர் முதல் நாள் செய்து சிவ அருளை பரிபூரணமாக பெற்று செப்டம்பர் மாதத்தை சிறப்பான மாதமாக மாற்றுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.