உங்கள் பட்டுப்புடவையை ட்ரைக்ளீன் செய்ய முடியவில்லையா? வீட்டிலேயே சுலபமாக இப்படி துவையுங்கள்! புதிது போல அப்படியே இருக்கும்.

boonthi-kottai-saree

பெண்கள் அணியும் உடைகளில் மிகவும் வித்தியாசமானது பட்டுப்புடவை, விலை உயர்ந்ததும் கூட.. பட்டுப் புடவையை விரும்பாத பெண்களே இருக்க முடியாது என்று கூறலாம். விதவிதமான வண்ணங்களிலும், மென்மையாக, நேர்த்தியாக உடுத்தக் கூடிய பட்டுப் புடவைகள் வீட்டில் துவைக்க முடியாது. அதனை ட்ரைகிளீனிங் செய்ய கொடுப்பது வழக்கம். ட்ரை கிளீனிங் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே எப்படி எளிதாக துவைக்க முடியும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

silk-saree

ட்ரை கிளீனிங் செய்ய அதிக நேரமும், அதிகம் செலவும் ஆகும். எனவே நாம் வீட்டிலேயே இப்படி பட்டுப் புடவைகளை பாதுகாத்து வந்தால் ட்ரை கிளீனிங் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சில குறிப்புகள் மூலம் பட்டுப்புடவையை சேதமில்லாமல் நேர்த்தியாக பாதுகாப்பு செய்யலாம். பட்டுப்புடவைகளை எப்பொழுதும் குளிர்ந்த நீரில் மட்டுமே துவைக்க வேண்டும். பட்டுப் புடவையை துவைக்க சோப்பு அல்லது சோப்பு தூள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது, அதில் இருக்கும் ரசாயனங்கள் மூலம் பட்டுப்புடவை சேதமாக வாய்ப்புகள் உண்டு.

பட்டுப் புடவையின் நிறம் மங்கலாக மாறி விடும் ஆபத்தும் உண்டு எனவே குழந்தைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை தேவையான அளவிற்கு குளிர்ந்த தண்ணீரில் சேர்த்து அதில் பட்டுப் புடவைகளை முக்கி எடுத்து நல்ல தண்ணீரில் அலசி அப்படியே காய வைக்க வேண்டும். புடவைகளை எப்பொழுதும் பிழியக்கூடாது. பிழிந்தால் அதில் இருக்கும் சுருக்கங்கள் நிரந்தரமாகிவிடும். நீங்கள் காயப்போடும் இடம் நல்ல இடமாக இருக்க வேண்டும். அங்கு புடவை காய்ந்து பறக்கும் பொழுது அதன் அருகில் இருக்கும் எந்த பொருட்களிலும், கம்பிகளிலும் மாட்டிக் கொள்ளாதவாறு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

baby-shampoo

குழந்தைக்கு பயன்படுத்தும் ஷாம்பு இல்லை என்றால் தலைக்கு சீயக்காய் தயாரிக்க பயன்படுத்தும் பூந்திக் கொட்டைகளை பத்து பதினைந்து எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வையுங்கள். அதிலிருந்து நுரை வர ஆரம்பிக்கும். ஊறிய காய்களை கசக்கி பிழிந்தால் இன்னும் நுரை வரும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிக்கட்டி குளிர்ந்த நீரில் சேர்த்து அதில் பட்டுப்புடவைகளை அலசி எடுத்தால் புடவையில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத அழுக்குகள் நீங்கி புடவையும் சேதமில்லாமல் சுத்தமாகிவிடும். இது பட்டுப்புடவைக்கு பயனுள்ள நல்ல குறிப்பாக இருக்கும்.

- Advertisement -

இப்படி பட்டுப் புடவைகளை அலசும் பொழுது நிறைய சோப்புக் குமிழ்கள் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். சோப்பு குமிழ்கள் புடவையை நிறம் மங்க செய்துவிடும். பட்டுப் புடவையை வாஷிங் மெஷினில் துவைக்க முடியுமா? என்று கேட்டால், ஆம்! முடியும் என்று கூறலாம். வாஷிங் மெஷினில் மைல்டாக துவைக்கும் ஆப்ஷன் இருக்கும். அந்த பொத்தானை திருப்பி வைத்து விட்டு லேசாக குளிர்ந்த தண்ணீரில் பட்டு புடவையை சுற்றி எடுத்து அப்படியே காய வைக்கலாம். இப்படி மிஷினில் துவைக்கும் பொழுது வேறு எந்த ஒரு உடையையும் சேர்க்கக்கூடாது. உங்கள் பட்டுப் புடவையை மட்டும் தனித்தனியாக துவைக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

silk-saree-dry-cleaning

பட்டுப் புடவையில் காபி, டீ போன்ற விடாப்பிடியான கறைகள் தெரியாமல் பட்டுவிட்டால் அதற்கு வினிகர் பயன்படுத்தி சுலபமாக நீக்கலாம். சிறிதளவு வெள்ளை வினிகரை அரை கப் தண்ணீரில் கலந்து கறை உள்ள இடத்தில் லேசாக ஊற விட்டால் போதும், எவ்வளவு கடினமான கறைகளையும் எளிதாக நீக்கிவிடும். வினிகர் சூப்பர் மார்க்கெட்டுகளில் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

talcum-powder

உணவு கறைகள் பட்டுப்புடவையில் தெரியாமல் பட்டுவிட்டால் அதன் மீது சிறிதளவு முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை தூவி விடுங்கள். உணவு கறையை பவுடர் சட்டென உறிந்து வைத்துக் கொள்ளும். அதன் பிறகு நீங்கள் பூந்திக் கொட்டை கலந்த தண்ணீரில் லேசாக முக்கி எடுத்தால் போதும். பட்டுப்புடவை சேதமில்லாமல் பளிச்சென கறைகள் நீங்கிவிடும். பட்டுப் புடவைகளுக்கு எப்பொழுதும் பிளீச் செய்யக்கூடாது, செய்தால் மந்தமான தோற்றத்தைக் கொடுத்து துணியை விரைவில் கந்தல் ஆக்கி விடும். இது போல் மிகவும் பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே பட்டுப் புடவைகளை எளிதாக க்ளீன் செய்து நீங்களும் பயனடையலாமே!