அட! இதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் இப்படியும் கூட பூரி செய்யலாமா என்று ஆச்சரியப்படுவீர்கள்

rice-poori
- Advertisement -

இட்லி, தோசையை விட பலருக்கும் விருப்பமான ஒரு உணவு என்றால் அது பூரி தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பூரி. இன்று சாப்பிட என்ன வேண்டும் என்ற கேள்வியை மட்டும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்கள். பலரும் சொல்லும் ஒரே பதில் பூரியாகதான் இருக்கும். அந்த வகையில் பூரி என்பது மிகவும் சுவையான ஒரு உணவு வகையாகும். அதிலும் இதனுடன் தொட்டுக்கொள்ள அதற்கு ஏற்ற சைடிஷ் செய்து கொடுத்தால் போதும். 3, 4, 5 என சலிக்காமல் சாப்பிடுவார்கள். அவ்வாறு எப்பொழுதும் மைதாமாவு, கோதுமைமாவு இவற்றைப் பயன்படுத்தி தான் பூரி செய்வதுண்டு. ஆனால் இந்த மாவு வகைகள் எதுவும் இல்லாமல் போனாலும் வீட்டில் இருக்கும் அரிசி மாவை மட்டும் பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு பூரியை இதுவரை நீங்கள் சுவைத்திருக்க மாட்டீர்கள். அப்படி தேங்காய் மற்றும் அரிசி மாவு சேர்த்து செய்யக்கூடிய இந்த சுவையான பூரியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – கால் மூடி, சீரகம் – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, இஞ்சி சிறிய துண்டு – 1, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு கால் மூடி தேங்காயை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து, அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மசாலா பேஸ்ட்டையும் அரிசிமாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற் றுடன் சிறிதளவு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாழை இலை அல்லது பால் கவரை எடுத்துக் கொண்டு, அதன் மீது சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிறு சிறு உருண்டையாக எடுத்து, வாழை இலையின் மீது வைத்து ,மெல்லியதாக தட்டி கொள்ள வேண்டும். இதனை பூரிக்கு மாவு திரட்டுவது போல திரட்டக்கூடாது. இதில் அரிசி மாவு சேர்த்துள்ளதால் கைகளினாலே பூரி வடிவத்திற்கு தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை எண்ணெயில் சேர்த்து பூரி போல் பொரித்தெடுக்கவேண்டும். இதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, வடைகறி அல்லது உருளைக்கிழங்கு மசாலா எதை வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -