இப்படி சப்பாத்தி மாவு பிசஞ்சு பாருங்க 2 விரலால் பீய்த்து அப்படியே சாப்பிடலாம்! சாஃப்டான சப்பாத்திக்கு சூப்பரான டிப்ஸ்!

soft-chappathi
- Advertisement -

ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப அவர்களுடைய உணவு முறை பழக்கம் இருந்து வருகிறது. தென்னிந்திய மக்கள் அதிகம் உணவில் சேர்ப்பது அரிசியை தான் என்றாலும், உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர் கோதுமையில் செய்த சப்பாத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. இந்த சப்பாத்தி மிருதுவாக லேயர் லேயராக பிரிந்து மெத்தென்று வருவதற்கு அதை பிசையும் முறை மிகவும் முக்கியமானது. சாப்டான சப்பாத்திக்கு மாவை எப்படி பிசைய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

முதலில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கோதுமை மாவு பிசைய வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரை பயன்படுத்துவது நல்லது. கை பொறுக்கும் சூட்டில் சுடு தண்ணீரை வைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கோதுமை மாவை பிசைய வேண்டும். கோதுமை மாவை பிசைவது கொஞ்சம் கடினம் தான் என்றாலும் மிருதுவான சப்பாத்தி வருவதற்கு கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். உங்கள் உள்ளங்கை விரல்களை நன்கு மடித்து அதன் பின்பக்க மூட்டுப் பகுதியை கொண்டு எல்லா இடங்களிலும் அழுத்தம் கொடுத்து உருட்ட வேண்டும்.

- Advertisement -

ஒரு கப் கோதுமை மாவுக்கு, அரை கப் தண்ணீர் சரியாக இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. சப்பாத்தி மாவு உருட்டும் பொழுது அகலமான பாத்திரத்தை விட, தட்டையாக இருக்கும் கட்டை அல்லது ஒரு பூரிக்கட்டை எடுத்து அதன் மீது போட்டு நன்கு அழுத்தம் கொடுத்து உருட்டி ரவுண்டாக வெடிப்புகள் இல்லாமல் எடுக்க வேண்டும். சுருட்டிய உருண்டையை அரை மணி நேரம் ஊற வைத்து செய்தாலும் சரி அல்லது அப்படியே உடனே செய்தாலும் சூப்பராக வரும். உருட்டிய உருண்டையை நீளவாக்கில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் சிறு சிறு துண்டுகளாக சப்பாத்தி போடுவதற்கு பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிரித்து வைத்த மாவை உங்கள் உள்ளங்கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டு உருட்டி, பின்னர் இரண்டாக, நான்காக மடித்து மீண்டும் உருட்ட வேண்டும். இவ்வாறு மடித்து மடித்து உருட்டும் பொழுது உள்ளே உங்களுக்கு லேயர் லேயராக அழகாக பிரிந்து வரும். விரிசல் இல்லாமல் உருண்டைகள் உருட்டிய பிறகு எல்லா மாவையும் இதே போல செய்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு உருண்டையை மட்டும் எடுத்து சப்பாத்தி கட்டையில் போட்டு அதன் மீது கொஞ்சம் கோதுமை மாவை தூவி விடுங்கள். பிறகு கைகளால் அழுத்தம் கொடுத்து தட்டை ஆக்கிக் கொள்ளுங்கள். ரெண்டு புறமும் மாவு படும்படி பிரட்டி போட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் பூரி கட்டையை வைத்து அழுத்தம் கொடுக்காமல், அதே நேரத்தில் கைகளை சப்பாத்தி மாவில் இருந்து எடுக்காமல் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு தேய்க்க வேண்டும். பரபரவென தேய்க்கும் பொழுது வாட்டத்திற்கு ஏற்ப லேசாக திருப்பி திருப்பி கைகள் எடுக்காமல் தேய்த்தால் ரவுண்டாக அழகாக வரும்.

பிறகு அடுத்த புறம் திருப்பி இதே போல கைகளை எடுக்காமல் பரபரவென தேய்க்க வேண்டும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப எளிதாக ஊற வைக்காமல் எண்ணெய், நெய் எதுவும் சேர்க்காமல் ஆரோக்கியமான டயட் சப்பாத்தி இப்போது தயார்! இதை தோசைக் கல்லை சூடாக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சப்பாத்தியை போட்டு இரண்டு புறமும் திருப்பி போட்டு கொண்டே இருந்தால் உப்ப ஆரம்பித்துவிடும். முழுவதுமாக உப்பியதும், இலேசாக கரண்டியை வைத்து அழுத்தம் கொடுங்கள். அப்போது சீரான அனலில் இரண்டு புறமும் பொன்னிறமாக நன்கு வெந்து வரும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -