சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகளுக்கும் இந்த சுரக்காய் கிரேவி கறி குழம்பு போல சூப்பரான சுவையில் இருக்கும்! நீங்களும் இதே போல செய்து பாருங்களேன்.

soraikkai-gravy
- Advertisement -

சுரைக்காயில் இருக்கும் நீர்ச்சத்து உடல் சூட்டை வெகுவாக குறைக்கும் அற்புத ஆற்றல் படைத்தது. உஷ்ணத்தால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க அடிக்கடி நீர் காய் வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். அந்த வகையில் இந்த சுரைக்காய் கிரேவி கறிக்குழம்பு சுவையில் இப்படி ஒருமுறை பத்தே நிமிடத்தில் செய்து பார்க்கலாமே! சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த சுரைக்காய் கிரேவி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

சுரைக்காய்

சுரக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
தனியா விதை – ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – ஒன்று, கிராம்பு – 3, பிரிஞ்சி இலை – ஒன்று, சீரகம் – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 4, தேங்காய் துருவல் – கால் கப், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், சுரைக்காய் – 350g, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – அரை லிட்டர், மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

சுரைக்காய் கிரேவி செய்முறை விளக்கம்:
முதலில் சுரைக்காய் கிரேவி செய்ய சுரைக்காயை நன்கு சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் தனியா, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, சீரகம், சோம்பு, மிளகு, வர மிளகாய் ஆகிய பொருட்களை மட்டும் லேசாக வாசம் வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். இவற்றின் வாசம் வந்தவுடன் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் அவற்றை அப்படியே ஆற விட்டு விடுங்கள்.

soraikkai-gravy1

இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பாதி அளவிற்கு வதங்கும் பொழுதே இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதங்கி வந்தவுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி மசிய வதங்கி வந்த உடன் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள சுரக்காய்களைச் சேர்த்து வதக்க வேண்டும். காய் லேசாக வதங்கியதும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரையும் சேர்த்து அதிகபட்சம் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் தண்ணீர் சேர்க்க வேண்டாம். பின்னர் குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

soraikkai-gravy2

பிரஷரை எடுத்து விட்டு மூடியை திறந்து ஒருமுறை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். பின்னர் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து இறக்குங்கள். தாளிக்க கடுகு, உளுந்து, கருவேப்பிலை, ஒரு வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொட்டலாம். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக பத்தே நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதே முறையில் நீங்களும் செய்து சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகளுக்கும் பரிமாறி மகிழுங்கள்.

- Advertisement -