மணக்க மணக்க ஸ்பெஷலான மைசூர் ரசம் எப்படி வைப்பது? இந்த மசாலாவை அரைத்துப் போட்டு ரசம் வைத்தால், இதோட வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

mysore-rasam
- Advertisement -

சமையலறையில் ரசத்தை கூட்டி வைக்கும்போதே அப்படியே வாசம் வர வேண்டும். அப்போதுதான் அந்த ரசம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இல்லையென்றால் ரசமும் விஷமாக மாறிவிடும். மணக்க மணக்க சூப்பரான ஒரு மைசூர் ரசம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். ஒவ்வொரு வீட்டிலும் ரசம் வைப்பதில் வித்தியாசம் தெரியும். ஒவ்வொரு வீட்டு ரசத்திலும் நிச்சயமாக ஒவ்வொரு ருசி இருக்கும். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது ஒரு ஸ்பெஷல் மைசூர் ரசம் ரெசிபி. இதற்கான மசாலா அரவையை நாமே வறுத்து அரைக்க போகின்றோம். அந்த மசாலா தான் இந்த ரசத்துக்கு ஸ்பெஷல்.

முதலில் சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து, புளி கரைசலில், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், தக்காளிப்பழம் – 1, பெருங்காயம் – 1/2 ஸ்பூன் சேர்த்து தக்காளி பழத்தை புளிக்கரைசலில் நன்றாக கரைத்து விடுங்கள். இதை அப்படியே ஒரு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போக புளி தண்ணீர் தக்காளி பழத்தோடு சேர்ந்து கொதிக்க வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு 1/4 கப் அளவு துவரம் பருப்பை குக்கரில் போட்டு 3 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக இந்த ஸ்பெஷல் ரசத்திற்கு மசாலாவை அரைக்கவேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெந்தயம் – 1/2 ஸ்பூன், துவரம்பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வரமல்லி – 2 ஸ்பூன், வர மிளகாய் – 4, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 2 ஸ்பூன், சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். வாசம் வரும் வரை வறுத்தால் போதும். இறுதியாக ஒரு கைப்பிடி தேங்காய் துருவலை போட்டு சிவக்க சிவக்க வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எல்லாப் பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

முதலில் புளித் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இருக்கின்றோம் அல்லவா. அந்த புளித்தண்ணீரில், அரைத்த இந்த ரச பொடியில் இருந்து 2 ஸ்பூன் அளவு ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிடுங்கள். புளித்தண்ணீரின் பச்சை வாடை சுத்தமாக நீங்கிய பின்பு, வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் துவரம்பருப்பை தண்ணீரோடு ரசத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த இடத்தில் ரசத்துக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு முறை கரண்டியை வைத்து நன்றாக கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து ரசத்தை கொதிக்க விடுங்கள்.

ரசம் மிதமான தீயில் நுரை கட்டி இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, கொத்தமல்லி தழைகளை தூவிக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியில் 1 – ஸ்பூன் நெய் விட்டு, கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து தாளித்து இந்த தாளிப்பை அப்படியே ரசத்தில் கொட்டி கலந்து பரிமாறினால் சூப்பரான மைசூர் ரசம் தயார்.

நாம் அரைத்த ரச பொடியை ஒரு பாட்டிலில் போட்டு மூடி, ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவாட்டி உங்க வீட்ல இப்படி ரசம் வச்சு பாருங்க. எப்படி வாசம் வீசுதுன்னு உங்களுக்கே தெரியும்.

- Advertisement -