2 கப் கோதுமை மாவு இருந்தா போதும். ஈஸியா ஸ்டஃப்டு கோதுமை ரொட்டி ரெடி பண்ணிடலாம். தொட்டுக்க கூட எதுவுமே வேண்டாம்.

- Advertisement -

ஸ்டஃப்டு கோதுமை ரொட்டி | Stuffed gothumai roti recipe

இட்லி, தோசைக்கு பதிலாக கோதுமை மாவு இருந்தா கொஞ்ச நேரத்தில் சூப்பரான ஸ்டஃப்டு கோதுமை ரொட்டி தயார் செஞ்சுடலாம். இதற்கு தொட்டுக்க கூட நாம் எதையும் தேட வேண்டிய அவசியமே இல்லை! சூப்பரான சுவையில் சமோசா போலவே இருக்கக்கூடிய இந்த வித்தியாசமான ஸ்டஃப்டு கோதுமை ரொட்டி எளிதாக வீட்டில் தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – இரண்டு கப், உப்பு – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு. ஸ்டஃப்பிங் செய்ய: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – நான்கு, இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மல்லித்தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – அரை கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

ஸ்டஃப்டு கோதுமை ரொட்டி செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் போல உப்பு போட்டு நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவு காய்ந்து விடாமல் பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்குள் ஸ்டஃப்பிங் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பொடிப்பொடியாக நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில் வெங்காயம் தான் அதிகமாக இருக்க வேண்டும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வரும் பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பச்சை வாசம் போக வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் ஒரு பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். அதன் பிறகு மசாலா தூள்கள் சேர்க்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, பின் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். மசாலா வாசம் போக நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை அரை கைப்பிடி அளவிற்கு தூவி விடுங்கள். ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். ஆறியதும் நீங்கள் கோதுமை மாவை சப்பாத்தி போல மெலிதாக திரட்டாமல் சற்று தடிமனாக திரட்டுங்கள். அதனுள் ஸ்டாப்பிங் பொருட்களை வைத்து மேலே கொழுக்கட்டைக்கு மூடி வைப்பது போல மூடி வைத்து பிறகு தட்டையாக அழுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மீந்து போன சாதம் இருந்தால் வீணாக்காமல் 10 நிமிடத்தில் சூப்பராக க்ரிஸ்பியான மொறுமொறு பக்கோடா இப்படியும் செய்யலாமே!

இப்போது வட்ட வட்டமாக இட்லி போல உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை இட்லி பானையில் வைத்து ஐந்து நிமிடம் நன்கு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவித்து எடுத்த இந்த கோதுமை ரொட்டிகளை தேவையான அளவிற்கு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் கடுகு, கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாம் நறுக்கி தூவி இவற்றை அதனுள் வைத்து எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சூப்பரான டேஸ்டியான ஸ்டஃப்பிங் கோதுமை ரொட்டி ரெடி! இதற்கு தொட்டுக்கவே வேணாம், அப்படியே சாப்பிட்டு சாப்பிடலாம், சமோசா சாப்பிடுவது போல செம ருசியாக இருக்கும்.

- Advertisement -