சுண்டைக்காய் சட்னி செய்முறை

sundaikai chutney
- Advertisement -

வயிற்றில் இருக்கக்கூடிய புண் ஆறவும், வயிற்றுப்புழுக்கள் நீங்கவும் நம்முடைய முன்னோர்கள் அவர்கள் காலத்தில் அடிக்கடி சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வார்கள். இதில் இருக்க கூடிய சத்துக்களால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இன்றளவும் சித்தமருத்துவத்தில் சுண்டைக்காய்க்கு என்று ஒரு தனி பங்கு இருக்கிறது. அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும். வயிறு சுத்தமாகும். அப்படிப்பட்ட இயற்கை அன்னையின் கொடையாக திகழக் கூடிய சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் சுண்டைக்காயை வைத்து எப்படி சட்னி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

சுண்டைக்காயில் கால்சியம், புரதச்சத்து, இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. சுண்டைக்காயை நாம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரையின் அளவு உயராமல் பார்த்துக் கொள்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் ரீதியான பிரச்சினைகளான நீர் கட்டி, தைராய்டு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் சுண்டைக்காய் ஒரு தீர்வாக திகழ்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சுண்டைக்காய் – ஒரு கப்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • உளுந்து – 1/4 கப்
  • சின்ன வெங்காயம் – 10
  • பச்சை மிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 2
  • இஞ்சி – ஒரு இன்ச்
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்து மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் சுண்டைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். சுண்டக்காயின் நிறம் மாறி அதன் தோல் நன்றாக சுருங்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்து வைத்திருக்கும் உளுந்து, காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் வதக்கி வைத்திருக்கும் சுண்டைக்காயையும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

விருப்பம் இருப்பவர்கள் தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றிக் கொள்ளலாம். ஆரோக்கியமான சுண்டைக்காய் சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: மதுரை ஸ்பெஷல் பால் பன் செய்முறை

சுண்டைக்காயை குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தரும் பொழுது அதை சாப்பிடாமல் தூக்கிப் போடும் நபர்கள் இருக்கும் இல்லங்களில் இப்படி சட்னி செய்து தருவதன் மூலம் சுண்டைக்காயின் பலனை முழுமையாக பெற முடியும்.

- Advertisement -