குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுண்டல் வைத்து எப்படி சூப்பரான புளி குழம்பு செய்யலாம்? இப்படி சுண்டல் புளி குழம்பு செஞ்சு பாருங்க சப்பு கொட்டி சாப்பிடுவாங்க!

sundal-puli-kulambu
- Advertisement -

சாதாரண புளி குழம்பை விட இது போல சுண்டல் போட்டு புளி குழம்பு செஞ்சி கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். கார குழம்பா? வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் குழந்தைகள் இது போல மூக்கடலை போட்டு குழம்பு வைத்து கொடுக்கும் பொழுது சமத்தாக சாப்பிட்டு விடுவார்கள். ருசியான மூக்கடலை குழம்பு எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சுண்டல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு மூக்கடலை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பூண்டு பற்கள் – ரெண்டு, துருவிய இஞ்சி – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, துருவிய தேங்காய் – அரை கப், தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சுண்டல் குழம்பு செய்முறை விளக்கம்:
இந்த குழம்பு செய்வதற்கு முதலில் கருப்பு மூக்கடலையை முந்தைய நாள் இரவே நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். இரவு முழுவதும் ஊறினால் தான் கருப்பு சுண்டல் ரொம்ப சாஃப்ட்டாக வேகும். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை நார், விதைகள் போன்றவற்றை நீக்கி உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தக்காளி, வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் தேங்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து நைசாக தேவையான அளவிற்கு தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை தூக்கி வையுங்கள். கடாய் காய்ந்ததும் நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் நான்கு டேபிள் ஸ்பூன் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடுங்கள். இஞ்சி பூண்டு ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து சேர்த்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டு வரும் பொழுது பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை உருவி போட்டு மசிய வதக்கி விடுங்கள். வெங்காயம், தக்காளி மசிஞ்சி வந்ததும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேருங்கள். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து இந்த குழம்பிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு வதக்கி விடுங்கள்.

மசாலாவின் பச்சை வாசம் போக வதக்கி விட்டுக் கொண்டே இருங்கள். கருப்பு மூக்கடலையை மூன்றில் இருந்து நான்கு விசில் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்கு சாப்ட்டாக வெந்த கருப்பு மூக்கடலையை இப்போது சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி விட்டு தேவையான அளவிற்கு புளிக் கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்து குழம்பு சுண்டியதும் நறுக்கிய மல்லி தழை தூவி சுடச்சுட சாதத்துடன் பரிமாறி பாருங்கள், அவ்வளவு சூப்பராக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -