அவசர நேரத்திற்குச் சமைத்துக் கொடுப்பதற்காகவே சில உணவு வகைகள் இருக்கின்றன. எப்படி நூடுல்சை இரண்டு நிமிடத்தில் சமைக்கின்றோமோ அதுபோல சேமியா உப்புமாவை ஐந்தே நிமிடத்தில் செய்து விடலாம். அதிலும் இந்த சேமியா உப்புமா உதிரி உதிரியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருந்தது என்றால் அனைவரும் நூடுல்ஸ் போலவே இதனையும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இந்த உப்புமா எப்படி சமைத்தாலும் கொஞ்சம் பிசுபிசுப்பு தன்மையுடன் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதனை சாப்பிடும் பொழுது நாவிற்கு ஏற்ற சுவையில் இருக்காது. எனவே உப்மா என்றாலே பலரும் சலித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த சின்ன குறிப்பை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். நீங்கள் செய்யும் உப்புமாவும் இனிமேல் உதிரி உதிரியாக வரும். வாருங்கள் இந்த சுவையான சேமியா உப்புமாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சேமியா – 3 கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 5, கேரட் – 1, பீன்ஸ் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாய் வைக்க வேண்டும். பின்னர் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் 3 கப் சேமியாவை கொஞ்சம் துகலாக உடைத்து சேர்க்க வேண்டும். பிறகு இந்த சேமியாவை நெய்யில் வதக்க வேண்டும். அப்பொழுது அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
வறுத்த சேமியாவை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன், பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவேண்டும். பின்னர் 3 கப் சேமியா விற்கு ஏற்ற அளவான பதத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதாவது 3 கப் சேமியாவிற்கு 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீரின் அளவு அதிகமாகிவிட்டால் சேமியா உதிரி உதிரியாக வராது. எனவே ஒரு கப் சேமியாவிற்கு ஒரு கப் தண்ணீர் என்ற அளவில் வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறி விட்டு, 5 நிமிடம் மூடி போட்டு வைத்தால் போதும். சுவையான சேமியா உப்புமா தயாராகிவிடும்.