குழந்தைகள் பசிக்கிறது என்றவுடனே பிரட் வைத்து செய்யக்கூடிய இந்த மசாலா கட்லெட்டை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் பசித்தீர சாப்பிடுவார்கள்

bread
- Advertisement -

குழந்தைகள் என்றாலே விளையாட்டுத் தனமாகத்தான் இருப்பார்கள். சாப்பிடும் வேளையில் சரியாக சாப்பிட மாட்டார்கள். என்னதான் அதட்டி, மிரட்டி சாப்பிடக் கொடுத்தாலும் அவர்கள் போதும் என்று அளவு மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து திடீரென்று பசிக்கிறது எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் உடனே சமைத்து கொடுக்க முடியாது. எனவே வீட்டில் பிரட் இருந்தால் போதும். ஐந்தே நிமிடத்தில் இந்த சுவையான பிரட் கட்லட்டை செய்திட முடியும். குழந்தைகளும் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த பிரட் கட்லட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

bread-

தேவையான பொருட்கள்:
பிரட் – 10 துண்டுகள், உருளைக்கிழங்கு – 2, பச்சை பட்டாணி – 50 கிராம், கேரட் – 1, மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், நெய் – 4 ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை பட்டாணியையும் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கேரட்டை காய் துருவலை பயன்படுத்தி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாயகன்ற கிண்ணத்தில் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, துருவிய கேரட் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும்.

potato

பின்னர் இவற்றுடன் ஒன்றரை ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு மேஷர் பயன்படுத்தி இவை அனைத்தையும் மசித்து விட வேண்டும். மேஷர் இல்லை என்றாலும் கைகளை பயன்படுத்தி மசித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் பிரட் துண்டை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளும் வகையில் ஒரு வட்ட வடிவ கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் கிண்ணத்தை விட சிறிய அளவில் உள்ள இன்னொரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும். முதலில் பிரெட்டை பெரிய கிண்ணத்தை வைத்து வட்ட வடிவில் வெட்டி எடுக்க வேண்டும்.

bread

பின்னர் இந்த வட்ட வடிவ பிரட் துண்டை சிறிய மூடியை வைத்து நடுவில் வட்டமாக வெட்டி எடுக்க வேண்டும். இப்பொழுது ஒவ்வொரு பிரெட்டும் ஒரு வட்ட வடிவ வளையம் மற்றும் சிறிய வட்ட வடிவ பிரெட் துண்டு இப்படி இரண்டாக இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

bread

பின்னர் அனைத்து வட்டவடிவ பிரட் வளையத்தினுள்ளும் செய்து வைத்துள்ள மசாலாவை நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து, நெய் ஊற்றி, செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை தோசைக்கல்லில் போட்டு, இரண்டு புறங்களும் நன்றாக சிவந்து வருமாறு வேகவைத்து எடுக்கவேண்டும். பிறகு மீதமுள்ள வட்டவடிவ பிரட் துண்டுகளையும் இதே தோசைக்கல்லில் வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு கட்லட் மீதும் வறுத்த பிரெட் துண்டை வைத்து அதன்மீது அரை ஸ்பூன் தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாற கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.

- Advertisement -