கத்தரிக்காய் பிரியர்கள் இந்த ரகசிய பொடியை போட்டு ஒருமுறை இப்படி வறுவலாக செய்து பாருங்கள்! தின்னத் தின்னத் திகட்டவே செய்யாது.

brinjal-varuval2
- Advertisement -

ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் அதிகம் பிடித்தமான காய்கறியாக இருக்கும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே அலர்ஜியாக இருக்கும். கத்தரிக்காயை ஒருவிதமான ஒவ்வாமை உடையவர்கள் சாப்பிட்டால் நமச்சல் ஏற்படும் என்று தவிர்த்து விடுவார்கள். ஆனால் கத்தரிக்காய் பிரியர்களுக்கு எவ்வளவு செய்து கொடுத்தாலும் பத்தவே பத்தாது. அத்தகையவர்களுக்கு இந்த ரகசிய பொடியை போட்டு ஒரு முறை வறுவலாக இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள்! உங்களை பாராட்டி தள்ளி விடுவார்கள். இந்த சுவையான கத்தரிக்காய் வறுவலை நாமும் எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

brinjal1

கத்திரிக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு – ஒரு டீஸ்பூன், கத்தரிக்காய் – அரை கிலோ, வர மிளகாய் – 4 கறிவேப்பிலை – இரண்டு கொத்து, மல்லி விதை – 3 டேபிள் ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கடலை எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

கத்திரிக்காய் வறுவல் செய்முறை விளக்கம்:
அரை கிலோ அளவிற்கு கத்தரிக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் போடாமல் அப்படியே வைத்தால் கறுத்து போய்விடும். பிறகு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் அதில் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை போட்டு லேசாக ஒரு நிமிடம் வதக்கவும். இவை இலேசாக வதங்கியதும் மல்லி விதை, மிளகு, கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

brinjal-varuval

நீங்கள் வறுக்கும் பொழுது நல்ல ஒரு மணம் வீசும். பின்னர் அரை டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் மற்றும் ஜீரகம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விட வேண்டியது தான். வெந்தயம் சேர்த்த பிறகு அதிக நேரம் அடுப்பு எரிய கூடாது. அடுப்பை அணைத்த பிறகு கூட நீங்கள் வறுத்துக் கொள்ளலாம். பின்னர் இவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை கத்தரிக்காய் மட்டுமல்லாமல், எல்லா வறுவலுக்கும் சேர்த்தால் சூப்பராக இருக்கும். ஒரு முறை அரைத்து வைத்தால் ரெண்டு வாட்டி சமைக்கலாம்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் நீங்கள் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய்களை கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி சேர்த்து லேசாக 2 நிமிடம் வதக்கி விடுங்கள். பின்னர் மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் இடையிடையே கிளறி விட வேண்டும். அப்போது தான் கத்திரிக்காய் நன்கு வேகும்.

brinjal-varuval1

சிறிது நேரம் கழித்து நீங்கள் திறந்து அரைத்து வைத்துள்ள பவுடரில் பாதி அளவிற்கு சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் பிரட்டி விட்டு கொண்டே இருந்தால் கத்தரிக்காயும், மசாலாவும் நன்கு ஒன்றுடன் ஒட்டிக் கொண்டு சூப்பரான சுவையை கொடுக்கும் வறுவலாக மாறிவிடும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக, அலாதியான சுவையில் கத்தரிக்காய் வறுவலை இப்படியே நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -