முட்டையை கறி சுவையில் இப்படி 10 நிமிடத்தில் சுக்கா செய்து பாருங்கள்! ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் பத்தாது.

- Advertisement -

முட்டையை விதவிதமான வகைகளில் நாம் சமைத்து சாப்பிட்டாலும் இந்த முறையில் சுக்கா போல செய்து சாப்பிட்டால் இன்னும் அதிகமாகவே சாதத்தை சாப்பிடுவோம். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும், முட்டையை வெறுக்கும் பெரியவர்களும் கூட இப்படி சுக்கா செய்து கொடுத்தால் கொஞ்ச நேரத்தில் காலி பண்ணி விடுவார்கள். அசத்தலான சுவையை கொடுக்கும் இந்த முட்டை சுக்கா எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

egg3

முட்டை சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 4, கடுகு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மல்லி தூள் – அரை டீஸ்பூன், சீரகத் தூள் – அரை டீஸ்பூன், மிளகுத் தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

முட்டை சுக்கா செய்முறை விளக்கம்:
முதலில் நான்கு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு முட்டையை அடித்து கலக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு சிறிய வாயகன்ற கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாற்றிக் கொள்ள வேண்டும். பின் இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீருக்குள் ஒரு ஸ்டாண்ட் போல ஏதாவது ஒன்றை வைத்து அதன் மீது நீங்கள் இந்த முட்டை ஊற்றிய கிண்ணத்தை வைக்க வேண்டும். பின்னர் மூடி போட்டு 15 நிமிடம் அளவான தீயில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

egg-sukka3

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும், ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகிய எல்லா மசாலாக்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின்படி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடிப்பிடிக்காமல் லேசாக வதக்கிய பிறகு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

egg-sukka2

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு நீங்கள் வேக வைத்து எடுத்த முட்டைகளை ஒரு இன்ச் அளவிற்கு சதுர சதுரமாக வெட்டி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முட்டைக்குள் மசாலா இறங்கும் வரை ஒரு இரண்டு நிமிடம் பிரட்டி விட்டு கொண்டே இருங்கள். பின்னர் தண்ணீர் வற்றி முட்டையுடன் மசாலா ஒன்றுடன் ஒன்றாக சுக்கா போல வந்துவிடும். பிறகு கொத்தமல்லி தழைகளை நறுக்கி சேர்த்து சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். ரொம்பவே அற்புதமான சுவையுள்ள இந்த முட்டை சுக்காவை நீங்களும் இதே மாதிரி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -