‘மிளகாய் பூண்டு சட்னி’ சும்மா காரசாரமா இப்படி ஒருமுறை வச்சு பாருங்க, உங்க வீட்டில அடிக்கடி இட்லி, தோசை தான் இனி!

chilli-garlic-chutney
- Advertisement -

எப்போதும் ஒரே மாதிரியான சட்னி வைத்து பழகியவர்களுக்கு ரொம்பவே குறைவான பொருட்களை வைத்து ஆரோக்கியமான இந்த மிளகாய் பூண்டு சட்னி செய்வதற்கு ரொம்பவே பிடிக்கும். வர மிளகாய், தக்காளி, பூண்டு ஆகிய இந்த மூன்று பொருட்களை மட்டும் பிரதானமாகக் கொண்டு செய்யப்படும் இந்த மிளகாய் பூண்டு சட்னி தின்னத் தின்னத் திகட்டாத ஒரு சட்னி வகை ஆகும். அதை எப்படி சுவையாக செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

‘மிளகாய் பூண்டு சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 15, தக்காளி – 3, கல் உப்பு – தேவையான அளவு, பூண்டு பற்கள் – ஒரு கைப்பிடி, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

‘மிளகாய் பூண்டு சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் மிளகாய் பூண்டு சட்னி செய்ய தேவையான அளவிற்கு வரமிளகாய் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குண்டு மிளகாய்க்கு பதிலாக, நீட்டு மிளகாய் சேர்த்தால் காரம் குறைவாக இருக்கும். காம்புகளை நீக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டு பற்கள் வருமாறு இரண்டு பெரிய பூண்டு முழுவதையும் தோலுரித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பழுத்த தக்காளி பழங்களை கழுவி சுத்தம் செய்து நான்கைந்தாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கார சட்னிக்கு எப்பொழுதும் கல் உப்பு சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும். எனவே தூள் உப்பு பயன்படுத்துவதை விட கல்லுப்பு பயன்படுத்துங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு சூடேறியதும், அதில் முதலில் வர மிளகாய்களை போட்டு லேசாக கருகி விடாமல் உப்பி வருமாறு வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதனுடன் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்குங்கள். இவை நன்றாக வதங்கி வரும் பொழுது பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி துண்டுகள் நன்கு குழைந்து வந்ததும் சட்னிக்கு தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 2 நிமிடம் வதக்கி விட்டு பின்பு அடுப்பை அணைத்து ஆற வைத்து விடுங்கள். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வாருங்கள். பின்னர் இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்!

அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். நீங்கள் நல்லெண்ணெய் ஊற்றினால் சுவை அதிகமாக இருக்கும். பின்னர் அதனுடன் கடுகு போட்டு நன்கு பொரிய விடவும். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கடைசியாக ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து தாளித்த பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை கொட்டி 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் பச்சை வாசம் முழுவதுமாக நீங்கும். பச்சை வாசனை போக வதக்கி எண்ணெய் பிரிய இறக்கி சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த ஆரோக்கியம் மிகுந்த மிளகாய் பூண்டு சட்னி இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -