ஆரோக்கியம் தரும் இந்த மிளகு சட்னி இப்படி ஒரு முறை செஞ்சு பார்த்தா இனி அடிக்கடி செய்வீங்க! இதன் சுவை இன்னும் 2 இட்லி கூட சாப்பிட வைக்கும்!

milagu-chutney1
- Advertisement -

தினமும் என்ன சட்னி செய்வது? என்று புலம்புபவர்களுக்கு இந்த மிளகு சட்னி ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது கடுகுக்கு கூறப்படும் பழமொழி அல்ல! உண்மையில் அது மிளகுக்கு கூறப்படும் ஒரு அற்புத பழமொழியாகும். மிளகில் இருக்கும் காரம் நம் உடலில் இருக்கும் பல்வேறு நோய்களை குணப்படுத்த வல்லது எனவே அடிக்கடி இந்த மிளகு சட்னியை இப்படி செய்து கொடுங்கள்! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

milagu-jeeragam

மிளகு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 2, பூண்டு பல் – 10, வெங்காயம் – 1, தக்காளி – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

மிளகு சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகு சேர்த்து செய்யப்படுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கும். மிளகு போட்டதும் அரை டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை லேசாக வறுத்த பின்பு இரண்டு வர மிளகாய்களை சேர்த்து வதக்குங்கள்.

Milagu benefits in Tamil

மிளகாய் லேசாக வறுபட்டதும் பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்கிய பின்பு, பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி நன்கு மசிய வதங்கி வரும் வரை வதக்கவும். பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து வதக்குங்கள். மிளகு சட்னி செய்யும் பொழுது தேங்காய் சேர்த்தால் தான் சுவை கூடுதலாக இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடும் படி செய்த பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஒரு கழுவிய மிக்ஸி ஜாரை எடுத்து அதில் இவற்றை சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றின் வாசம் வீட்டையே மணக்க செய்யும். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

milagu-chutney

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் அரை ஸ்பூன் அளவிற்கு உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தாளித்தவற்றை சட்னியுடன் சேர்த்து ஒருமுறை கலந்துவிட்டால் மணக்க மணக்க மிளகு சட்னி தயார்! இதனை சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதே முறையில் இதே அளவுகளில் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -