10 நிமிடத்தில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு அரைச்சு வெச்ச ப்ளெயின் குருமா இப்படி செஞ்சி பாருங்க, இனி அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க!

plain-kurma3
- Advertisement -

ரோட்டு கடைகளில் ரொம்பவே எளிதாக செய்யக்கூடிய குருமா இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். நாம் கஷ்டப்பட்டு அரைக்கும் இந்த குருமா அவர்கள் நொடியில் செய்து விடுவது எப்படி? வழக்கம் போல் அல்லாமல் எல்லாவற்றையும் ஒரே அடியாக மிக்ஸியில் போட்டு அரைத்து, தாளித்து, கொதிக்க விட்டு இறக்கினால் சுடச்சுட சுவையான குருமா தயார்! சுவை மிகுந்த இந்த பிளைன் குருமா எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குருமா செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, பூண்டு பற்கள் – 4, இஞ்சி – ஒரு விரல் நீளம், சோம்பு – கால் டீஸ்பூன், புதினா இலைகள் – ஒரு கொத்து, துருவிய தேங்காய் – அரை கப், வேர்கடலை – 2 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரிஞ்சி இலை – தலா 1, கரம் மசாலா – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

குருமா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். குருமாவிற்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய வெங்காயம், ஒரு பெரிய தக்காளி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சோம்பு, 2 பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா இலைகள், வேர்கடலை, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் மசாலா பொருட்கள் ஆக இருக்கும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள இன்னுமொரு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரை நன்கு வதங்கியதும், ஒரு பெரிய தக்காளி ஒன்றை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கெட்டியாக தளதளவென குருமா போல வந்த பிறகு நீங்கள் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுவையாக இருக்கக் கூடிய இந்த குருமா செய்வதற்கு 10 நிமிடம் கூட ஆகாது. சட்டென அரைத்து தாளித்து சேர்த்து சமைத்து விடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கும். இதே முறையில், இதே அளவுகளில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -