ஐந்தே நிமிடத்தில் இப்படி சுவையான பொட்டுக்கடலை சட்னி செய்து சுடச்சுட இட்லியுடன் சேர்த்து கொடுங்கள். இன்னும் இரண்டு இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள்

chutni
- Advertisement -

அனைவரது வீட்டிலும் காலை மற்றும் மாலை உணவாக இட்லி அல்லது தோசை செய்வது வழக்கமாக ஒரு உணவாக மாறிவிட்டது. அதிலும் குழந்தைகள் அடம் பிடிப்பது தோசை வேண்டும் என்று தான். எனவே இந்த உணவுகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி, குருமா என பலவிதமான சைடிஷ் செய்யப்படுகிறது. அதிலும் ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய சட்னி வகைகள் தான் அதிகமாக செய்யப்படுகிறது. அவ்வாறு அனைத்திலும் பெரும்பாலும் செய்யக்கூடிய சட்னி என்றால் அது தேங்காய் சட்னி மற்றும் பொட்டுக்கடலை சட்னி தான். இந்த பொட்டுக்கடலை சட்னியை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள். இதன் சுவையில் இரண்டு இட்லி சாப்பிடும் குழந்தைகள் கூட இன்னும் வேண்டும் என்று கூடுதல் இட்லியை சேர்த்து சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான பொட்டுக்கடலை சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – அரை கப், வர மிளகாய் – 6, தேங்காய் – ஒரு சில்லு, புளி சிறிய துண்டு – 1, உப்பு – அரை ஸ்பூன், பூண்டு – 4 பல், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஆறு வர மிளகாய் மற்றும் நான்கு பல் பூண்டு சேர்த்து இரண்டையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் பொட்டுக்கடலை, சிறிய துண்டு புளி மற்றும் ஒரு சில்லு தேங்காயை துருவி சேர்க்க வேண்டும். பிறகு வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் பூண்டை சேர்த்து அவற்றுடன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த இந்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிட்டு, இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பொட்டுக்கடலை சட்னி தயாராகிவிட்டது. இதனை சுடச்சுட இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -