வீட்டிலேயே 10 நிமிடத்தில் சுட சுட புதினா சப்பாத்தி வித்யாசமான முறையில் ருசியாக ரேஷன் கோதுமை மாவிலும் இப்படி செய்யலாமே!

puthina-chappathi
- Advertisement -

உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் இந்த சப்பாத்தியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இதனை வித்தியாசமான முறையில் புதினா இலைகளைப் போட்டு, மசாலாக்கள் சேர்த்து செய்யும் பொழுது கூடுதல் சுவையை கொடுக்கும். ருசி மிகுந்த இந்த வித்தியாசமான புதினா சப்பாத்தி நொடியில் வீட்டிலேயே எப்படி குறைவான பொருட்களை வைத்து எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் காண இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புதினா சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப், புதினா இலைகள் – ஒரு கைப்பிடி அளவிற்கு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மல்லித் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், மிளகுத் தூள் – கால் டீஸ்பூன், வெறும் மிளகாய்த் தூள் -கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

புதினா சப்பாத்தி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பௌலில் 2 கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் ரேஷன் கோதுமையில் செய்த மாவு இருந்தாலும் நன்றாகவே வரும். அதனுடன் பிரஷ்ஷாக இருக்கும் புதினா இலைகளை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை எவ்வளவு பொடி பொடியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு பொடிப் பொடியாக நறுக்கி கோதுமை மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் எல்லா மசாலாப் பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகிய மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நாலைந்து மிளகுகளை தட்டி சேர்த்தால் போதும். மிளகு தூள் சேர்த்தால் காரம் கூடுதல் ஆகிவிடும். இவற்றுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அளவின்படி மசாலாக்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால் தான் இதன் சுவை சரியாக இருக்கும்.

- Advertisement -

பின்பு அனைத்தையும் ஒன்றாக நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு கைகளில் ஒட்டாமல் உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சப்பாத்திக்கு தேவையான அளவுக்கு உருண்டைகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

10 நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு உருண்டைகளையும் எடுத்து வட்ட வடிவில் தட்டிக் கொள்ளுங்கள். பின்பு நான்கு புறமும் ஒன்றன் பின் ஒன்றாக சதுர வடிவில் மடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் தேய்த்தால் பரோட்டா போல உள்ளே லேயர் லேயராக வரும். அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல்லை காய விடுங்கள். நெய் அல்லது எண்ணெய் விட்டு ஒவ்வொரு சப்பாத்திகளை போட்டு இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்தால், சுவையான புதினா சப்பாத்தி நொடியில் தயார்! இம்முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -