10 நிமிடத்தில் ‘புதினா பட்டாணி புலாவ்’ இப்படி செஞ்சு பாருங்க இனி வாராவாரம் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க!

puthina-pattani-pulav
- Advertisement -

சித்ரான்னங்கள் செய்யும் பொழுது வித விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் சித்ரன்னங்கள் சுவையாக இருக்கும். அதில் பட்டாணி மற்றும் புதினா இலைகளை சேர்த்து செய்யப்படும் இந்த புதினா பட்டாணி புலாவ் ரொம்பவே வித்தியாசமான சுவையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்க இருக்கிறது. பத்து நிமிடத்தில் சுவையான புதினா பட்டாணி புலாவ் எப்படி எளிதாக வீட்டிலேயே செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

‘புதினா பட்டாணி புலாவ்’ செய்யத் தேவையான பொருட்கள்:
அரிசி – 2 ஆழாக்கு, புதினா – ஒரு கட்டு, பட்டாணி – 100 கிராம், இஞ்சி – ஒரு விரல் இன்ச், பூண்டு – 10 பற்கள், பச்சை மிளகாய் – 3, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, கிராம்பு – 2 துண்டு, அன்னாசிப்பூ – ஒன்று, பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 2, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

‘புதினா பட்டாணி புலாவ்’ செய்முறை விளக்கம்:
முதலில் 2 ஆழாக்கு அரிசியை களைந்து சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரிசி பாஸ்மதி அரிசி ஆக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். இல்லையேல் சாதாரண சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் அரிசியை பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் ஒரு கட்டு புதினா 2 கைபிடி வரும் அளவிற்கு இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் நீக்கி ஒரு விரல் நீளத்திற்கு வருமாறு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே பட்டாணியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஊற வைத்தால் போதும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகள், பூண்டு பற்கள், இஞ்சி துண்டுகள் ஆகியவற்றுடன் காரத்திற்கு தேவையான பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். பச்சை மிளகாய்க்கு பதிலாக நீங்கள் காய்ந்த மிளகாயையும் சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையை நன்கு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலா பொருட்கள் ஆக இருக்கும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை தாளித்து பின்னர் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காய துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் சுருள வதங்கியதும், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி துண்டுகள் மசிய வதங்கும் பொழுது ஊற வைத்த பட்டாணியை சுத்தம் செய்து இதில் போட்டு நன்கு வதக்க வேண்டும். அனைத்தும் கலந்து விட கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கியதும் நீங்கள் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, காரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து 4 ஆழாக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண சாப்பாடு அரிசியாக இருந்தால் ஒன்றுக்கு ரெண்டு என்கிற கணக்கில் தண்ணீர் சேர்க்க வேண்டும். பாஸ்மதி அரிசியாகயிருந்தால் ஒன்றுக்கு ஒன்னேகால் தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். அரிசியை சேர்த்ததும் நன்கு கலந்து விட்டு மூடி போட்டு 3 விசில் விட்டு எடுத்தால் போதும், பொலபொலவென சுவை மிகுந்த புதினா புலாவ் நொடியில் தயாராகி விட்டிருக்கும். நீங்களும் இதே முறையில் முயற்சி செய்து பார்த்து ருசியுங்கள்.

- Advertisement -