ருசியான சேமியா கிச்சடி ஒரு முறை இது போல் எளிதாக செய்து பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்!

semiya-kichadi
- Advertisement -

சேமியாவை உப்புமா செய்து கொடுத்தால் பலரும் அதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. அதில் கொஞ்சம் வித்தியாசமாக நல்ல மணமுடன், காய்கறிகள் எல்லாம் போட்டு கிச்சடி செய்து கொடுத்தால் எல்லோருமே சப்பு கொட்டி சாப்பிட்டு விடுவார்கள். சேமியா கிச்சடி இது போல் ஒரு முறை செய்து பாருங்கள், ரொம்பவே சூப்பராக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த சேமியா கிச்சடி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சேமியா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா – ஒரு கப், தேவையான காய்கறிகள் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு, நெய் – 2 டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

சேமியா கிச்சடி செய்முறை விளக்கம்:
முதலில் சேமியாவை நைசாக இருக்கும் சேமியாவாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். வறுத்த சேமியாவை நீங்கள் வாங்கினாலும் ஒரு முறை வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு சேமியாவை பொடித்துப் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆற வைத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் நீங்கள் தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இப்போது தேவையான காய்கறிகள் உங்களுக்கு விருப்பம் போல் தேர்ந்தெடுத்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை சேர்ப்பது சிறப்பு! பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் ஒன்றை தோலுரித்து பொடிப்பொடியாக நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் நெய் மற்றும் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை இறுதியாக விட்டுக் கொள்ள எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும், பெருங்காயத்தூள் போட்டுக் கொள்ளுங்கள். பின் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

இவை லேசாக வதங்கி வரும் பொழுது நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். காய்கறிகள் வேக சிறிது நேரம் எடுக்கும். அதனால் 5 நிமிடம் எண்ணெயிலேயே நன்கு வதக்கி விடுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்குங்கள், இன்னும் சீக்கிரமாக வதங்கும். காய்கறிகள் வெந்ததும் ஒரு கப் சேமியாவிற்கு 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது நீங்கள் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து ஒருமுறை நன்கு கிண்டி விடுங்கள்.

காய்கறிகளின் ஃப்ளேவர் சேமியா உடன் நன்கு கலந்து வர வேண்டும். ஐந்து நிமிடம் மூடி வைத்து இடையிடையே கிண்டி விடுங்கள். தண்ணீர் முழுவதுமாக உறிஞ்சிக் கொண்டு சேமியா உதிரி உதிரியாக நன்கு கிச்சடி போல் திரண்டு வர வேண்டும். அந்த சமயத்தில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி ஒரு முறை பிரட்டி சுடச்சுட கெட்டித் தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால், அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -