சிறுகீரை பருப்பு கடையல் எளிதாக இந்த முறையில் 10 நிமிடத்தில் கடைந்து பாருங்கள், கீரை பிடிக்காத குழந்தைகள் கூட அடிக்கடி கேட்க ஆரம்பிப்பார்கள்!

siru-keerai-kadaiyal
- Advertisement -

கீரை என்றாலே ஆரோக்கியம் தரும் என்பதால் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது. சரியான முறையில் பருப்பு சேர்த்து கடைந்து எடுக்கும் இந்த கீரை ரொம்பவே சுவையானதாக இருக்கப் போகிறது. எப்போதும் கீரை சமைக்கும் பொழுது மூடி வைக்காமல் திறந்த நிலையில் வைத்து சமைத்தால் தான் அதன் நிறமும், குணமும் மாறாமல் இருக்கும். பத்து நிமிடத்தில் சட்டுனு அசத்தலான சிறுகீரை பருப்பு கடையல் எப்படி செய்யலாம்? என்பதை நாமும் அறிந்து கொள்ள தொடந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

சிறுகீரை பருப்பு கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
சிறுகீரை – ஒரு கட்டு, பாசி பருப்பு – அரை கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், விளக்கெண்ணை – அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு பற்கள் – 3, பெரிய தக்காளி – 2, சீரகம் – கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காய்த் தூள் – ஒரு சிட்டிகை.

- Advertisement -

சிறுகீரை பருப்பு கடையல் செய்முறை விளக்கம்:
முதலில் சிறு கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்து விடுங்கள். எப்போதும் கீரையை சமைக்கும் பொழுது குக்கரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. 100 கிராம் அளவிற்கு பாசிப்பருப்பு எடுத்து அதையும் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வையுங்கள். ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் ஊற வைத்த பாசிப் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணை அரை டீஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் சீக்கிரம் வேகும். விளக்கெண்ணை இல்லை என்றால் சாதாரண சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வேக ஆரம்பிப்பதற்குள் 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்று பூண்டு பற்களை தோலுரித்து சேருங்கள். இரண்டு பெரிய தக்காளியை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவற்றுடன் மிளகு, சீரகம் ஆகியவற்றை இடித்து சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இந்த பொருட்களெல்லாம் வேகும் அளவிற்கு தண்ணீர் இருந்தால் போதும், அதிகம் சேர்க்க கூடாது. பத்து நிமிடத்தில் பருப்பு பூ போல மலர்ந்து வெந்துவிடும். அதன் பிறகு நீங்கள் ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு வேக விடுங்கள். கீரை நன்கு மசிய வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

கீரையில் அதிகமாக இருக்கும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வடித்து பின்னர் ஒரு மத்து போட்டு நன்கு கடைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை மீண்டும் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளித்துக் கொட்ட வேண்டியது தான். ரொம்பவே அற்புதமான, ஆரோக்கியமான ருசி மிகுந்த இந்த சிறுகீரை கடையல் இப்படி நீங்கள் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -