கூட்டு, பொரியல் மட்டுமே செய்ய பயன்படுத்தும் முடக்கத்தான் கீரையை வைத்து முதன்முதலாக அசத்தலான குழிப்பணியாரத்தை சுவையாக செய்திடலாம் வாங்க

kuzhi-paniyaram
- Advertisement -

கீரை வகை என்றாலே அவற்றில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கணக்கிலடங்காத வகையில் இருக்கின்றன. அவ்வாறு காய்கறிகளை விடவும் கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் பெரும் அறிவுரையாக இருக்கும். ஆனால் பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி பலரும் அதனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஏதாவது ஒரு நாள் சமையலில் இவ்வாறு கீரை வகையை சேர்த்திருந்தாலும் அன்று எப்போதும் சாப்பிடும் சாப்பாட்டின் அளவை விட குறைந்த அளவே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள். எனவே அவர்கள் விரும்பும் வகையில் இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொடுத்தால் அவற்றை தட்டாமல் தாராளமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு முடக்கத்தான் கீரையை வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு வகைதான் முடக்கத்தான் கீரை குழிப்பணியாரம். இந்த குழிப்பணியாரத்தை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mudakathaan-2

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 200 கிராம், உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை – இரண்டு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒன்றரை ஸ்பூன், சிறு பருப்பு – ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 200 கிராம் இட்லி அரிசி மற்றும் 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக கழுவி 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் நன்றாக ஊறிய பின்னர் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இரண்டு கைப்பிடி முடக்கத்தான் கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து அரிசியுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

idli-arisi

அதன்பிறகு இவற்றுடன் 4 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து அதனுடன் லேசாக தண்ணீர் சேர்த்து மிக்சியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த மாவினை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் ஒன்றரை ஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் சிறு பருப்பு சேர்த்து அவற்றை ஒரு நாள் முழுவதும் புளிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மறுநாள் இந்த மாவுடன் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். அதன் பிறகு அடுப்பின் மீது வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த மாவில் கலந்து கொள்ள வேண்டும்.

kuzhi

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது குழிப்பணியாரக் கல்லை வைத்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் தடவி, மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊற்றிக் கொள்ளவேண்டும். ஒருபுறம் நன்றாக வெந்ததும் மறுபுறம் திருப்பி விட வேண்டும். இரண்டு புறங்களும் நன்றாக வெந்தவுடன் அவற்றை ஒரு தட்டில் வைத்து அதனுடன் தேங்காய் சட்னி செய்து பரிமாறி கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் முடக்கத்தான் கீரை குழிப்பணியாரம் தயாராகிவிட்டது.

- Advertisement -