நாவூரும் தக்காளி ஊறுகாய் இப்படி பக்குவமாக செய்து வைத்து விட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, தயிர் சாதத்துக்கு தொட்டுக்க வேற எதுமே தேவையே இல்லை!

tomato-pickel
- Advertisement -

ஊறுகாய் வகைகளில் விதவிதமாக இருக்கும் பொழுது தக்காளி ஊறுகாய் மீது பிரியம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கத் தான் செய்கிறார்கள். தக்காளியின் சுவைக்கு அடிமையாகிப் போன பலரும் இந்த ஊறுகாயை அடிக்கடி செய்து சாப்பிடுவது உண்டு. கெட்டியாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய் சாதத்துடன் அல்லது டிஃபன் வகைகளுடன் தொட்டுக் கொண்டால் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடலாம். அந்த அளவிற்கு சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும் இந்த தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
நாட்டு தக்காளி – இரண்டு கிலோ, வெறும் மிளகாயத் தூள் – காரத்திற்கேற்ப, நல்லெண்ணெய் – 120 கிராம், கல் உப்பு – தேவைக்கு ஏற்ப, புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு, பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

தக்காளி ஊறுகாய் செய்முறை விளக்கம்:
முதலில் பழுத்த தக்காளி பழங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டுத்தக்காளி ஆக இருப்பது மிகவும் முக்கியமானது. தக்காளிகளை சுத்தம் செய்து அதன் முனை பகுதியை மட்டும் நீக்கி நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தக்காளி துண்டுகள், அதனுடன் புளியும் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளியின் தோல் கொஞ்சம் கூட இல்லாதவாறு அரைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். கடுகு படபடவென பொரிந்து முடிந்ததும் அடுப்பின் தீயை குறைவாக வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட் கலந்து கொள்ளுங்கள். பின் இதனுடன் மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கல் உப்பு சேர்ப்பது ஊறுகாய்க்கு ருசி தரும் என்பதால் தூள் உப்பை தவிர்க்கவும். தக்காளி சாறு கெட்டியாக திரள வர வேண்டும் எனவே அது வரை இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருங்கள்.

தக்காளி சாறு தளர்வாக இல்லாமல் நன்கு திரண்டு கெட்டியாக வருவதற்கு இரண்டு மணி நேரம் எடுக்கும். பொறுமையாக அதுவரை நீங்கள் இடையிடையே கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக ஒருமுறை உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆறவிட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் கூட சூடு இல்லாமல் ஆறியதும் ஊறுகாயை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தேவையான பொழுது எடுத்து தோசை மீது தடவி சட்னியே இல்லாமல் தோசையை சாப்பிட்டு விடலாம். சப்பாத்தி மீது தடவி சப்பாத்தி ரோல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அப்படியே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். தோசை, சப்பாத்தி மட்டுமல்லாமல் இட்லி, உப்புமா, தயிர் சாதம் போன்றவற்றுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த தக்காளி ஊறுகாயை இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -