இட்லி, தோசை, சாதத்திற்கு பக்காவான சைட் டிஷ் இந்த கத்திரிக்காய் தக்காளி கடையல் இப்படி செய்து பாருங்கள்! ஒரு சட்டி சாப்பாடு கூட பத்தவே பத்தாது.

- Advertisement -

பாரம்பரியமான முறையில் பாட்டி காலத்து கத்திரிக்காய் தக்காளி கடையல் இப்படி செய்து கொடுத்தால் சட்டி நிறைய சோறு இருந்தாலும் நமக்கு பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த கத்திரிக்காய் தக்காளி கொத்சு கொங்கு நாட்டு பாரம்பரியம் கொண்டது. இதனை இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கும், சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்பவே சூப்பராக இருக்கும். தமிழ் மணம் மாறாத இந்த கத்திரிக்கா தக்காளி கொத்சு செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

brinjal

கத்திரிக்காய் தக்காளி கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காஞ்ச மிளகாய் – 5, கருவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், பெரிய தக்காளி – 5, கத்திரிக்காய் – 200 கிராம், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கத்திரிக்காய் தக்காளி கடையல் செய்முறை விளக்கம்:
பொதுவாக கடையல் செய்ய மண் சட்டியை பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. உங்கள் வீட்டில் மண்சட்டி இருந்தால் அதனை ஒருமுறை கழுவி பயன்படுத்துங்கள். அப்படி இல்லாதவர்கள் அடி கனமான வாணலியை வைத்து கொள்ளலாம். இப்போது அடுப்பை பற்ற வைத்து சட்டியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் 5 காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேருங்கள்.

tomato-brinjal-kadayal1

காய்ந்த மிளகாய் லேசாக வதக்கி வரும் வேளையில் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி நன்கு தாளித்தம் செய்ததும், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் ஒரு கப் அளவிற்கு எடுத்து இதனுடன் சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி வரும் சமயத்தில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும். தக்காளி துண்டுகளை சேர்க்கும் பொழுது கடையல் இன்னும் கூடுதல் சுவை தரும். தக்காளியை குறைத்துக் கொண்டு காய்கறியை அதிகப்படுத்தினால் காய்கறி உடைய சுவை அதிகப்படும்.

- Advertisement -

உங்கள் தேவைக்கு ஏற்ப இதனை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். தக்காளி நன்கு மசிய வதங்கி வந்ததும் கத்தரிக்காய்களை நன்கு கழுவி பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். கத்திரிக்காயை சமையலில் சேர்க்கும் பொழுது தான் நறுக்க வேண்டும். முன்னரே நீங்கள் நறுக்கி வைத்துக் கொண்டால் கறுத்து போய் விடும். எனவே சமையலில் சேர்க்கும் பொழுது நறுக்கினால் போதும். பிரஷ்ஷாக இருக்கும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும். இவற்றை லேசாக வதக்கியதும் மூடி போட்டு மூடி விடுங்கள்.

tomato-brinjal-kadayal2

ஒரு பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் காய்கள் நன்கு வெந்திருக்கும். இப்பொழுது ஒரு மத்து போட்டு நன்கு கடைய வேண்டும். சட்டியை பயன்படுத்தாதவர்கள் இவை ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக டேஸ்டியான கத்தரிக்காய் தக்காளி கடையல் ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து விடலாமே!

- Advertisement -