இப்படி மசாலா பொடி சேர்த்து சுவையான மிகவும் க்ரஸ்பியான போண்டா செய்து டீயுடன் சேர்த்துக் கொடுத்து பாருங்கள். இந்த குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்ற ஸ்நாக்ஸாக இருக்கும்

bonda8
- Advertisement -

இப்பொழுது குளிர்காலம் என்பதால் மாலை நேரத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே மாலை டீ குடிக்கும் நேரத்தில் டீயுடன் சேர்த்து சுடச்சுட ஏதாவது சாப்பிட இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும் என்று தோன்றும். இது போன்ற நேரங்களில் நினைத்த உடனே சட்டென செய்து கொடுக்கும் ஒரு ஸ்நாக்ஸை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து போகின்றோம். இந்த ஸ்நாக்ஸை செய்வதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானதாகும்.

அதே போல் இதனை செய்வதற்கு நேரமும் அதிகமாக செலவிட தேவையில்லை. மிகவும் நல்ல சுவையுடன் மசாலா சேர்த்து செய்வதால் இதனை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த மசாலா போண்டாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, சிறிய உருளை கிழங்கு – 1, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 4 பல், சீரகம் – ஒரு ஸ்பூன், வேர்க்கடலை – 3 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, உப்பு – ஒரு ஸ்பூன், பேக்கிங் சோடா – கால் ஸ்பூன், தயிர் – இரண்டு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 3 பச்சை மிளகாய்களை இரண்டாக உடைத்து சேர்க்கவேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 3 ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து அதையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு உருளைக்கிழங்கை அதன் மேல் உள்ள தோலை சீவி, காய் துருவல் வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும்.

பிறகு துருவிய உருளைக்கிழங்கு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலந்து விடவேண்டும். பின்னர் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை மசாலாவை சேர்த்து முழுவதுமாக ஒன்று சேர கலக்க வேண்டும்.

பின்னர் இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி போண்டா போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து சிறிய போண்டாவாக எண்ணெயில் போட வேண்டும். அவை நன்றாக சிவந்ததும் வெளியே எடுக்க வேண்டும். இந்த மசாலா போண்டாவை மாலை உணவுடன் சேர்த்து பரிமாறிக் கொடுங்கள். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -