டீக்கடை இனிப்பு போண்டா சுவையில் 10 நிமிடத்தில் வீட்டிலேயே சுவையான போண்டா சுடுவதற்கு இந்த 4 பொருள் போதுமே!

maida-bonda-tea
- Advertisement -

டீக்கடையில் செய்யும் இந்த இனிப்பு போண்டா எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்தமானதாக இருக்கும். டீ கடைக்குச் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது சமோசாவும், இனிப்பு போண்டாவும் தான். வெளியில் மொறுமொறுவென்று, உள்ளே சாஃப்டாகவும் இருக்கும் இந்த சுவையான இனிப்பு போண்டா செய்வதற்கு வீட்டில் இருக்கும் இந்த 4 பொருட்கள் போதும்! டேஸ்டியான டீக்கடை இனிப்பு போண்டா எப்படி செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

இனிப்பு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 300 கிராம், சர்க்கரை – 150 கிராம், ஏலக்காய் – 5, ஆப்ப சோடா – அரை டீஸ்பூன்.

- Advertisement -

இனிப்பு போண்டா செய்முறை விளக்கம்:
முதலில் இனிப்பு போண்டா செய்வதற்கு முக்கால் கப் அளவிற்கு வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து 5 ஏலக்காய்களைப் போட்டுக் கொள்ளுங்கள். சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து அரைக்கும் பொழுது நைசாக நன்கு அரைபட்டு விடும். மிக்ஸியை இயக்கி தூளாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பௌலில் இதனை சேர்த்து இவற்றுடன் சுமார் ஒன்றரை கப் அளவிற்கு மைதா மாவு சேர்க்க வேண்டும்.

300 கிராம் மைதா மாவு சேர்த்து பின்பு போண்டா உப்பி வருவதற்கு அரை டீஸ்பூன் அளவிற்கு சோடா உப்பு சேர்க்க வேண்டும். சமையல் சோடா எனப்படும் ஆப்ப சோடா சேர்ப்பதற்கு விருப்பம் இல்லை என்றால் அதற்கு பதிலாக புளித்த இட்லி மாவு அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து தெளித்து போண்டா மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும். கையில் எடுத்து கீழே போட்டால் தொப்பென்று விழுந்து விட வேண்டும்.

- Advertisement -

அந்த அளவிற்கு சரியான பதத்தில் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மணி நேரம் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அதில் கொஞ்சம் புளித்த தன்மை ஏற்படும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வட சட்டியை எடுத்து வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு சுட சுட காய்ந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொள்ள வேண்டும். பின்னர் போண்டா மாவிலிருந்து ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சிறிது சிறிதாகக் ஆங்காங்கே போட வேண்டும்.

ஒரு முறை மாவு போட்ட பின்பு அரை நிமிட இடைவெளியில் அடுத்த மாவு உருண்டை சேர்க்க வேண்டும். உடனே சேர்த்தால் மாவு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே சீராக நீங்கள் எல்லா போண்டாக்களையும் நல்ல பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். மிதமாக சிவக்க வறுத்து எடுத்தால் வெளியேயும், உள்ளேயும் மிருதுவாக இருக்கும். நல்ல சிவப்பு நிறமாக வறுத்து எடுக்கும் பொழுது தான் மேலே மொறுமொறுவென்றும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும். எனவே உங்களுடைய தேவைக்கு ஏற்ப சரியான அளவில் வறுத்து எண்ணெயை வடிகட்டி எடுத்து வைத்தவுடன் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -