பொதுவாக கோவில்களில் தீர்த்தம் கொடுத்தால் அதை குடிப்பது மட்டும் இல்லாமல் பலரும் தலையில் தெளித்துக் கொள்வார்கள். கண்களில் ஒற்றி எடுத்துக் கொள்வார்கள். கோவில்களில் கொடுக்கும் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ளலாமா? அல்லது கூடாதா? என்னும் ஆன்மீகம் சார்ந்த இந்த கேள்விக்கான விடையை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
பொதுவாக, பெருமாள் மற்றும் சிவன் கோவில்களில் வழங்கப்படும் தீர்த்தத்தின் மூலப் பொருட்கள் வேறுபடும். இது அந்தந்த தெய்வங்களின் குணங்களையும், வழிபாட்டு முறைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். பெருமாள் கோவில்களில் பெரும்பாலும் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தம் நறுமணம் மிக்கதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. பெருமாளுக்கு உகந்ததாகக் கருதப்படும் துளசி, இந்தத் தீர்த்தத்தின் முக்கியமான பொருள். இதனுடன் இயற்கையான பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள். இது தீர்த்தத்திற்கு நல்ல மணத்தைக் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் கொண்டது. சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் கிராம்பு, ஏலக்காயும் சேர்க்கப்படுகிறது. சில கோவில்களில் மட்டும் மிகவும் விசேஷமாக குங்குமப்பூவும் சேர்க்கப்படுவது உண்டு.
சிவன் கோவில்களில் வழங்கப்படும் தீர்த்தம், பெரும்பாலும் வில்வ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இது பஞ்சகவ்யம் மற்றும் வாசனைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம், ஞானத்தையும், மன அமைதியையும் தருவதாக நம்பப்படுகிறது. சிவனுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் வில்வம், இந்தத் தீர்த்தத்தின் மிக முக்கியமான பொருள். சுவை மற்றும் நறுமணத்திற்காக ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கிராம்பு, ஜாதிபத்திரி மற்றும் வால் மிளகு இவை அனைத்தும் ஒரு சிறப்புப் பொடியாகத் தயாரிக்கப்பட்டு தீர்த்தத்துடன் சேர்க்கப்படுகிறது. பெருமாள் கோவிலைப் போலவே இங்கும் நறுமணத்துக்காக பச்சைக் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.
இவையெல்லாம் அந்த காலம் முதல் இந்த காலம் வரை பின்பற்றி வருகிறார்கள். மக்களின் நன்மைக்காகவும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ஆத்ம மற்றும் சரீர சுத்தம் ஏற்படவும் தீர்த்தமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்த்தத்தை இடது கையின் மீது வலது கையை வைத்து வாங்கியதும், முதலில் இரு கண்களிலும் ஒற்றி எடுத்து பின் சிறிதளவு தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் குடிக்க வேண்டும் என்பதுதான் முறையாகும். தீர்த்தத்தை குடித்துவிட்டு பின் தலையில் தெளிக்கக்கூடாது.
தீர்த்தம் கொடுத்த பிறகு பெருமாள் கோவில்களில் பெருமாளின் பாதத்தை அதாவது ஜடாரியை தலையில் வைப்பார்கள். தீர்த்தத்தை வாயில் குடித்ததும் அது எச்சில் பட்டதாகிவிடுகிறது. அந்த எச்சில் பட்ட தீர்த்தத்தை தலையில் தெளிப்பதால், பிறகு நம் தலையில் வைக்கும் ஜடாரியின் மூலம் நமக்கு பாவம் வந்து சேரும் என்பது ஐதீகம். பெருமாளின் பாதம் வைக்கும் சமயத்தில், இந்த பாவத்தை செய்யக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொல்லுவார்களே தவிர, தலையில் தீர்த்தத்தை தெளிக்கக்கூடாது என்று சொல்லுவது முறையாகாது.
இதையும் படிக்கலாமே:
பெண்கள் பூ வைக்கும் முறை
கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டு கொடுக்கும் தீர்த்தம் ரொம்பவும் புனிதம் வாய்ந்தது. மந்திர ஒலிகள், மணியோசைகள், இறைவனுடைய சக்தி அனைத்தும் ஒன்று சேர ஈர்த்துக் கொண்டிருக்கும் இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நம்முடைய மனதில் எழும் தீய எண்ணங்கள், நம்மை தொடரும் தீய சக்திகள் அனைத்தும் விலகும். கோவிலில் தீர்த்தம் கொடுத்தால் கீழே சிந்தாதவாறு சிறிதளவு தெளித்துக் கொண்டு பின்னர் குடித்து விடுங்கள்.