நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியம் தடைகள் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் அதற்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு காரியத்தை செய்யும் பொழுதும் விநாயகரை வழிபாடு செய்து விட்டு செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை தொடர்ச்சியாக 5 நாட்கள் பிள்ளையார் சுழி போட்டு வழிபாடு செய்வதன் மூலம் எப்பேற்பட்ட தடைகளும் தவிடு பொடி ஆகும். அந்த வழிப்பாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிள்ளையார் சுழி வழிபாடு
ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாக எப்படி விநாயகரை வழிபாடு செய்து விட்டு தொடங்குகிறோமோ அதே போல் தான் எந்த ஒரு விஷயத்தை எழுதுவதாக இருந்தாலும் எழுதுவதற்கு முன்பாக பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட பிள்ளையார் சுழி என்பது விநாயகருக்கு உகந்த ஒரு சுழியாக கருதப்படுகிறது. அந்த சுழியை போட்டு நாம் தொடங்கக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது வெற்றியடையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிள்ளையார் சுழியை வைத்து தான் நாம் இந்த வழிபாட்டை செய்ய போகிறோம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு உரிய நாளாக கருதப்படுவது தான் சங்கடஹர சதுர்த்தி வரக்கூடிய நாள். அதுவும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த வழிபாட்டை நாம் தொடங்கினோம் என்றால் இந்த வழிபாடு நிறைவடைவதற்கு உள்ளாகவே நமக்கு இருக்கக்கூடிய தடைகள் விலகுவதை நம்மால் உணர முடியும். இந்த வழிபாட்டை ஜூன் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
இதற்கு நமக்கு ஒரு மனை பலகை வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் மனை பலகை இல்லை என்னும் பட்சத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு இடத்தை தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நாட்கள் அந்த இடத்தில் வேறு எதுவும் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நாம் எந்த இடத்தில் இந்த வழிபாட்டை செய்யப் போகிறோமோ அதாவது மனைப் பலகையோ அல்லது தரையோ அந்த இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த தண்ணீரால் மொழுகி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வீட்டு பூஜை அறையில் தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்து பச்சரிசி மாவினால் அந்த இடத்தில் முதலில் ஒரு பிள்ளையார் சுழியை போட வேண்டும். பிறகு அந்த பிள்ளையார் சுழிக்கு வாசனை மிகுந்த மலர்களை வைத்து “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் விநாயகப் பெருமானின் மந்திரத்தை குறைந்தபட்சம் 27 முறையும் அதிகபட்சம் 108 முறையும் கூறி உங்களுக்கு எந்த விஷயத்தில் தடைகள் இருக்கிறதோ அந்த தடைகள் விலக வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த சமயத்தில் விநாயகப் பெருமானுக்காக ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியம் வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இதே முறையில் மறுநாளும் அதற்கு பக்கத்திலேயே பிள்ளையார் சுழி போட்டு மலர்களை சாற்றி மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 5 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். ஆறாவது நாள் பச்சரிசியால் எழுதி இருக்கும் இந்த பிள்ளையார் சுழியை கால்படாத இடத்திலோ அல்லது செடிகளின் அடியிலோ போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பாவம் நீங்கி செல்வம் சேர தீபம் ஏற்றும் முறை
மிகவும் எளிமையான இந்த ஐந்து நாள் வழிபாட்டை முழுமனதோடு யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு விநாயகரின் அருளால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.