தை மாதம் என்பதே சிறப்பு மிகுந்த மாதம் என்றும் அந்த தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு விசேஷமான நாட்களும் மிகவும் சிறப்புக்குரியது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாக திகழ்வதுதான் தைப்பூச நாள். தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திர நாளன்று இந்த தைப்பூச திருவிழா என்பது அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடைபெறும். சிறிய கோவிலாக இருந்தாலும் பெரிய கோவிலாக இருந்தாலும் அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த தைப்பூசத்திற்கு பலரும் 48 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். 48 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் 21 நாட்களோ 11 நாட்களோ அல்லது ஆறு நாட்களோ விரதம் இருப்பார்கள். இப்படி எந்த விரதத்தையுமே மேற்கொள்ள இயலவில்லை என்று நினைப்பவர்கள் தைப்பூச நாள் அன்று மட்டும் எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தைப்பூச வழிபாடு
இந்த வருடம் தைப்பூசம் என்பது பிப்ரவரி மாதம் 11-ம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானின் மந்திரங்களை கூறி விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். விரதத்தை அன்று மாலை 6:00 மணிக்கு வழிபாடு செய்து முடித்த பிறகு பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் விரதம் இருக்க முடியாது ஆனால் வழிபாடு மட்டும் செய்கிறோம் என்பவர்கள் தைப்பூச நாளன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ காலையில் 7:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள்ளோ அல்லது 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள்ளோ அல்லது மாலை 5 30 மணியிலிருந்து 7:50 மணிக்குள்ளோ இந்த தைப்பூச வழிபாட்டை செய்யலாம்.
அன்றைய தினம் வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் சிலை அல்லது வேலிற்கு பால், பன்னீர், தேன் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் முருகனின் சிலை, வேல் இல்லை என்பவர்கள் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக இந்த மூன்று பொருட்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது மூன்றையுமே நெய்வேத்தியமாக வைக்கலாம். அடுத்ததாக சிறப்பான நெய்வேத்தியமாக அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்கு பிடித்த தேன், தினை மாவு, அவல், பொரிகடலை, சர்க்கரை பொங்கல், பாயசம், பால் சாதம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் என்று தங்களால் எதை வைத்து வழிபாடு செய்ய முடியுமோ அதை செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு முன்பாக குறைந்தபட்சம் ஆறு என்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றுக்கொள்ளலாம். அதிகபட்சம் தங்களால் எத்தனை தீபங்களை ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்களை ஏற்றுக்கொள்ளலாம். பிறகு சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டி விட்டு “ஓம் சரவணபவ போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி முருகப்பெருமானுக்கு வாசனை நிறைந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அடுத்ததாக தங்களுக்கு தெரிந்த முருகனின் பாடல்களான கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், திருப்புகழ், கந்தர் அனுபூதி, சண்முக கவசம் போன்ற எதை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூபம் ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு அல்லது ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டும் விரதம் இருக்கலாம். அவர்களின் உடல் நலத்தைப் பொறுத்து விரதத்தை மேற்கொள்வது நல்லது. முடிந்த அளவிற்கு அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு அன்னதானம் செய்வதும் நல்ல பலனைத் தரும்.
இதையும் படிக்கலாமே:வீட்டில் வைக்கக்கூடாத தெய்வங்கள்
முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக கருதக்கூடிய இந்த தைப்பூச நாளன்று இந்த முறையில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.