மிக்ஸி தேவையில்லை சுவையான தக்காளி கடையல் எப்படி செய்யலாம்? இட்லி, தோசைக்கு பாரம்பரிய சட்னி!

thakkali-kadaiyal-idli-chutney
- Advertisement -

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான தக்காளி கடையல் இப்படி செஞ்சா மிக்ஸி கூட தேவையில்லை. சாதாரண பாத்திரங்களில் செய்வதை விட மண் பாத்திரத்தில் இதை செய்தால் இன்னும் சுவை மாறாமல் பாரம்பரியமான மணத்துடன் இருக்கும். அருமையான தக்காளி கடையல் எளிதாக வீட்டில் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 5, பூண்டு பற்கள் – 15, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – இரண்டு கொத்து, உப்பு – தேவையான அளவு, கடுகு – கால் ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

தக்காளி கடையல் செய்முறை விளக்கம்:
தக்காளி கடையல் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தை தோலுரித்து ஒன்றிரண்டாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி பழங்களை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு சிறிய பற்களாக இருப்பது நல்லது. அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். மண்சட்டியை வைத்து சமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

வாணலியில் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி பழங்கள், வெங்காயம், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டு பற்கள், பெருங்காயத்தூள் சிறிதளவு மஞ்சள் தூள் கால் ஸ்பூன், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து ஐந்து நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் நன்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் பொருட்களை மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எவ்வளவு நைசாக கடைய முடியுமோ அவ்வளவு நைஸாக கடைய வேண்டும். கடைய தெரியாதவர்கள் இவை ஆறியதும் மிக்சியில் போட்டு பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு வானலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் சீரகம், சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

தாளித்து முடித்த பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள தக்காளி கடையலை சேர்த்து ரெண்டு நிமிடம் நன்கு வதக்கி விடுங்கள். அப்போதுதான் இவற்றின் பச்சை வாசம் போகும். எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று கலந்து எண்ணெய் பிரிய கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து சுட சுட இட்லி, தோசை, அடை தோசை அல்லது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதே போல பாரம்பரியமான முறையில் தக்காளி கடையலை செஞ்சி பாருங்க, விரும்பி சாப்பிடுவீங்க.

- Advertisement -