கறி குழம்பு சுவையில் தக்காளி குருமாவை இப்படி செஞ்சு சாப்பிட்டுங்க. இது தக்காளி குருமாவா இல்ல கறி குருமாவா என்று நீங்களே யோசிப்பீங்க அந்த அளவுக்கு குருமா டேஸ்ட் சூப்பரா இருக்கும்

- Advertisement -

குருமா என்றாலே தேங்காய் அரைத்து ஊற்றி கொஞ்சம் இனிப்பு சுவையுடன், காரமும் கலந்து தான் இருக்கும் ஆனால் இந்த தக்காளி குருமா அப்படி இல்லை நல்ல காரசாரமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சிக்கன் மட்டன் போன்ற அசைவு உணவு சாப்பிட முடியாத நாட்களில் இந்த தக்காளி குருமா வைத்து சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்ட உணர்வு இந்த தக்காளி குருமாவில் கிடைக்கும். வாங்க ஒரு காரசாரமான தக்காளி குருமாவை எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தக்காளி குருமா செய்வதற்கு முதலில் மசாலா அரைத்து கொள்ள வேண்டும். மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் அரைக் கப் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் 3, சோம்பு 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், 6 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, 8 முந்திரி இவையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று தண்ணீர் ஊற்றாமல் அரைத்த பிறகு, தண்ணீர் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக குருமாவை தாளித்துக் கொள்ளலாம், அடுப்பை பற்ற வைத்து குக்கர் வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொஞ்சம் கல்பாசி, ஏலக்காய் 2, லவங்கம் 4,மிளகு 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய 2 மீடியம் சைஸ் வெங்காயம் இவை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதக்க வேண்டாம் குருமா நிறம் மாறி விடும். இந்த குருமா வெள்ளை நிறத்தில் தான் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு கொஞ்சம் புதினா, கொத்தமல்லி சேர்த்த பின் நான்கு பெரிய தக்காளியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி இதில் சேர்த்து அரைத்த வைத்த தேங்காய் விழுது பேஸ்டை இதில் சேர்த்த பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விடுங்கள்.

- Advertisement -

குக்கர் இரண்டு விசில் வந்தால் போதும் தக்காளி குழைய கூடாது, இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முழுவதுமாக இறங்கியவுடன் குக்கர் திறந்தால் நல்ல கம கமக்கும் தக்காளி குருமா தயார். இதன் மேலே கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை தூவி நீங்கள் பரிமாற தொடங்கலாம். இந்த குருமாவிற்கு சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்ற அனைத்திற்கும் நல்ல ஒரு காம்பினேஷன்.

இந்த வித்தியாசமான தக்காளி குருமாவை இனி நீங்கள் அசைவம் சமைக்க முடியாத நாட்களில் செய்து கொடுத்து விடுங்கள். இது அசைவ குருமா இல்லை என்று சொன்னால் நம்ப கூட மாட்டார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

- Advertisement -