கிரேவி போல் ‘தக்காளி பூண்டு சட்னி’ ருசியாக இப்படி ஒருமுறை அரைத்து பாருங்க, எவ்வளவு இட்லிகள் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்!

poondu-chutney
- Advertisement -

பூண்டில் இருக்கும் எண்ணற்ற சத்துகள் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் மூலிகை ஆகும். இதை குழம்பு வைத்து சாப்பிடுவது போல, தக்காளியுடன் சேர்த்து காரச் சட்னி அரைத்தும் சாப்பிடலாம். கிரேவி போல் திக்காக இருக்கும் இந்த தக்காளி பூண்டு சட்னி ருசியில் ஆளைத் தூக்கும். சுவையான தக்காளி பூண்டு சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – 3 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 12, பூண்டு பற்கள் – 25, சின்ன வெங்காயம் – 15, பெரிய தக்காளி -2, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன் கறிவேப்பிலை ஒரு இணுக்கு.

- Advertisement -

தக்காளி பூண்டு சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் பூண்டு பற்களை தோலுரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டின் ருசியும், தக்காளியின் ருசியும் சேரும் பொழுது சட்னிக்கு நல்ல ஒரு மணத்தைக் கொடுக்கும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து முழுதாக அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டி வைத்தால் போதும். பொடி பொடியாக நறுக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். வாணலி சூடேறியதும் உளுந்து சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக தான் போட்டு வறுக்க வேண்டும். உளுந்து எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுத்த பின்பு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் நீட்டு வர மிளகாய் காம்பு நீக்கி தேவையான எண்ணிக்கையில் உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து கருகி விடாமல் லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். மிளகாய் உப்பி வரும் பொழுது அதை கரண்டியால் எண்ணெயை வடிகட்டி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இப்போது தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பூண்டு பற்கள் நன்கு சுருள லேசான பொன்னிறத்தில் மாறியதும், தனியாக எண்ணெயை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் முழுதாக சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் சுருள வதங்கியதும் அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வறுபட்டதும் அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மீதமிருக்கும் எண்ணெயில் கொஞ்சம் புளி சேர்த்து லேசாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் எடுத்து வைத்துள்ள எல்லா பொருட்களும் நன்கு ஆற வேண்டும். எல்லா பொருட்களும் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்னிக்கு அதே எண்ணெயில் தேவைப்பட்டால் கூடுதல் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கினால் சுடச்சுட தக்காளி பூண்டு சட்னி தயார்! இதே முறையில், இதை அளவுகளில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -