ரோட்டு கடை காரச் சட்னி இப்படி அரைச்சீங்கன்னா ஒரு நிமிஷம் கூட ஆகாது சட்டுனு ரெடி பண்ணி எல்லாம். சுடச் சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா போதும் கணக்கில்லாம இட்லி உள்ள போயிட்டே இருக்கும்.

- Advertisement -

இட்லி தோசைக்கு இந்த கார சட்னி எப்போதுமே ஒரு ஸ்பெஷலான டிஷ் தான். அதிலும் ரோட்டு கடையில் கொடுக்கும் காரச் சட்னியின் சுவையை பற்றி சொல்லவே தேவையில்லை. நாம் வீட்டில் அரைக்கும் சட்னியை விட முற்றிலும் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் வைத்து சூடான பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். அதன் பிறகு நான்கு பல் பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதுவும் சிவந்து வந்த பிறகு இரண்டு பெரிய பழுத்த தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி அத்துடன் ஏழு காய்ந்த மிளகாய் கிள்ளி இதில் சேர்த்த பிறகு கொஞ்சம் கொத்தமல்லி அல்லது புதினா இரண்டில் எது உங்களிடம் இருந்தாலும் அதை சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வையுங்கள். அதன் பிறகு ஆறிய இந்த விழுதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கால் டீஸ்பூன் உப்பு மட்டும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அரை ஸ்பூன் கடுகு போட்டு பொரிந்த பிறகு, அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து அதுவும் சிவந்த பிறகு ஒரே ஒரு காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து இறக்கி விடுங்கள்.

இப்போது அரைத்த சட்னியை ஒரு பவுலுக்கு மாற்றி உங்களுக்கு சட்னி தண்ணியாக வேண்டும் என்றால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அப்படியே கெட்டியாக வைத்து தாளித்ததை அதில் ஊற்றி சுட சுட இட்டியுடன் பரிமாறுங்கள்.

இதையும் படிக்கலாமே பாலக் பன்னீர் செய்வது இவ்வளவு ஈஸியா? சத்தான உணவை, சுவையாக செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க.

இந்த சட்னியின் சுவைக்கு எத்தனை இட்லி உள்ளே போனது என்று உங்களுக்கு தெரியாது அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். நீங்களும் இனி அவசரமாக சட்டுனு சட்னி செய்யணும்னு முடிவு பண்ண இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.

- Advertisement -