இட்லி, தோசைக்கு சட்டுனு ஒரு சுவையான தள்ளுவண்டி தக்காளி சாம்பார் 5 நிமிஷத்துல செய்யணுமா? இப்படி செஞ்சு பாருங்க!

idli-tomato-sambar
- Advertisement -

இட்லி, தோசைக்கு பொதுவாக கடகடவென சட்னி அரைப்பது வழக்கம். ஆனால் சட்னி வகைகள் சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு எளிதாக செய்யக்கூடிய இந்த சாம்பார் செய்து கொடுத்தால் கூடுதலாக 2 இட்லியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். அதிகம் மெனக்கெடாமல் வெறும் தக்காளியை மட்டும் வைத்து செய்யக்கூடிய இந்த அருமையான தள்ளுவண்டி தக்காளி சாம்பார் சுவையாக எப்படி வீட்டிலேயே செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

தக்காளி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி – நான்கு, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஆறு, சோம்பு – அரை ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பூண்டு பற்கள் – 2, உப்பு – தேவையான அளவு, இட்லி மாவு – ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், தாளிப்பு வடகம் – 1/2 ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

தக்காளி சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் நான்கு பழுத்த தக்காளி பழங்களை எடுத்து சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சோம்புத்தூள் ஆக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். பூண்டு பற்களை நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய்த் தூள் இல்லை என்றால் சாதாரண மிளகாய் தூள் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இவற்றுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் மூழ்கும் அளவிற்கு சேர்த்தால் போதும், அதிகம் சேர்க்க தேவையில்லை. இப்போது குக்கரை மூடி 10 விசில் விட்டு எடுங்கள். நன்கு மைய வெந்து போயிருக்கும். ஒரு மத்து வைத்து மைய நைசாக கடைந்து கொள்ளுங்கள். கடைய தெரியாதவர்கள் தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளலாம்.

பின்னர் இதன் கெட்டி தன்மைக்கு ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்து அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இட்லி மாவுக்கு பதிலாக கடலை மாவு ஒரு டீஸ்பூன் அளவிற்கு கரைத்து சேர்க்கலாம். நன்கு கொதித்த பிறகு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் கடுகு போட்டு பொரிய விட்டு, தாளிப்பு வடகம், மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்த்தால் ரொம்பவே அட்டகாசமான சுவையுடன் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -