நம்மை முன்னேற விடாமல் தடுக்கக்கூடிய சக்திகள் என்று சில சக்திகள் இருக்கின்றன. அந்த சக்திகளை விரட்டி அடிப்பதற்கு பலவிதமான பரிகாரங்கள் இருந்தாலும் திருஷ்டி சுத்தி போடுவது என்பது மிகவும் சிறந்த பரிகாரமாக திகழ்கிறது. பிறருடைய தீய பார்வையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் நாம் முன்னேற கூடாது என்ற கெட்ட எண்ணத்தோடு செய்யக்கூடிய செயல்களும் முற்றிலும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் ஒரு முறையோ, மாதத்தில் ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ திருஷ்டி சுத்தி போடும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வருடத்தின் கடைசி நாளன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீய சக்திகளும் திருஷ்டி தோஷங்களும் விலக
சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்போம். அந்த சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்காக கடினமாக உழைக்கவும் செய்வோம். அந்த உழைப்பின் பலனால் நமக்கு நன்மைகளும் உண்டாகும். ஆனால் அதை பார்க்கக்கூடிய பலருக்கும் நம்மை விட இவர் முன்னேறி விட்டாரே என்ற ஒரு தீய எண்ணம் மனதிற்குள் உண்டாகிவிடும். அந்த எண்ணம் தோன்றி விட்டாலேயே அந்த எண்ணத்தின் பலனால் நம்முடைய முன்னேற்றம் பாதிக்கப்படும். அவர்களுடைய தீய எண்ணங்களும் தீய பார்வையும் நம்மை எதுவும் செய்யாமல் இருப்பதற்காக நாம் பலவிதமான பரிகாரங்களை செய்வோம். அந்த வகையில் வருடத்தின் கடைசி நாள் அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வருடத்தின் கடைசி நாள் என்பது ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. பொதுவாகவே தீய சக்திகளையும் திருஷ்டி தோஷங்களையும் நீக்குவதற்கு உரியக்கிழமையாக தான் ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. மேலும் இது வருடத்தின் கடைசி நாள் என்பதால் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரமானது. நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த அனைத்து விதமான தீய சக்திகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் என்று கூறப்படுகிறது.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு கல் உப்பு மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவுமே தேவையில்லை. இந்த பரிகாரத்தை மாலை 6:30 மணியிலிருந்து இரவு 11:30 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக படுக்கச் செல்வதற்கு முன் செய்துவிட்டு படுத்து உறங்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த பரிகாரத்தை செய்த பிறகு வேறு எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்து நிற்கச் சொல்ல வேண்டும். வீட்டில் வயதில் முதிர்ந்த பெண் யார் இருக்கிறார்களோ அவர்களுடைய வலது கையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து வலம் இருந்து இடமாக ஒன்பது முறை வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து நபர்களையும் சுற்ற வேண்டும். பிறகு அப்படியே வீட்டிற்கு வெளியே சென்று வீட்டு நிலை வாசலையும் வலம் இருந்து இடமாக ஒன்பது முறை சுற்ற வேண்டும்.
கடைசியாக அவர்களையே அவர்கள் வலம் இருந்து இடமாக ஒன்பது முறை சுற்றிவிட்டு வீட்டிற்கு வெளியே அதாவது தெருவிற்கு சென்று ஒரு ஓரமாக இந்த கல்லுப்பை போட்டுவிட்டு வரவேண்டும். ஒருவேளை அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே செல்ல இயலாது என்பவர்களும், தெருவிற்கு செல்ல இயலாது என்பவர்களும் வீட்டிற்கு வெளியே ஒரு பேப்பரில் இந்த உப்பை மடித்து வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து தெருவோரமாக கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:துயரங்களை விலக்கும் துர்க்கை தீபம்
இந்த முறையில் வருடத்தின் கடைசி நாளான ஏப்ரல் 13ஆம் தேதி நாம் திருஷ்டி சுத்தி போடுவதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளும் கெட்ட எண்ணங்களும் திருஷ்டி தோஷங்களும் முற்றிலும் நீங்கும். பிறக்க போகும் புது வருடம் சிறப்பான வருடமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.