அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதமாக திகழக்கூடிய இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி என்பது ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி ஆடி மாதத்தின் 28ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதோடு வேண்டிய வரத்தையும் எளிதில் அம்மனிடம் இருந்து பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல் அம்மனின் தரிசனத்தையும் நம்மால் காண முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு
எந்த தெய்வத்தை நினைத்து எந்த ஒரு வழிபாட்டை நாம் செய்யும் பொழுதும் அந்த வழிபாட்டின் நிறைவாக நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அதே சமயம் நாம் எந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும், அந்த தெய்வத்தின் தரிசனத்தை பெற வேண்டும் என்றும் நினைப்போம். இவை அனைத்தையும் பெறுவதற்கு வாராகி அம்மனை பஞ்சமி திதியில் வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
பஞ்சமி திதி என்பது ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி காலை 8 39 மணிக்கு ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி காலை 6 24 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் தேய்பிறை பஞ்சமி வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழிமுறைகளை பின்பற்றி வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். தங்களுடைய வழிபாட்டு முறைகள் எதுவோ அதை முறையாக பின்பற்றிக் கொள்ளுங்கள். அதோடு சேர்த்து இந்த வழிமுறையும் பின்பற்றுங்கள்.
ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது மாலை 6:45 மணியிலிருந்து 7:45 மணி அல்லது 8:45 மணியிலிருந்து 9:45 மணி. இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் வாராஹி அம்மனின் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் இன்றைய தினம் குங்கும அபிஷேகம் செய்வது வாராகி அம்மனின் மனதை குளிர வைத்து வேண்டிய வரத்தை பெற உதவும். படம் வைத்திருப்பவர்கள் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். தீபம் மற்றும் இயற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் தீபத்தை மட்டும் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு நாற்காலி அல்லது ஒரு முக்காலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் வாசனை மிகுந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். ஐந்து அகல் விளக்குகளை அதில் வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம் அல்லது ஐந்து முகங்கள் கொண்ட அகல் விளக்கை பயன்படுத்தியும் தீபம் ஏற்றலாம். அல்லது ஒரே ஒரு தீபத்தை மட்டும் வாராகி அம்மனை நினைத்து ஏற்றலாம். இந்த தீபம் வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்தையே வாராகி அம்மனாக பாவித்து வழிபாடு செய்யப் போகிறோம். அதனால் இந்த தீபத்திற்கு முன்பாக கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
பிறகு ஊதுபத்தி சாம்பிராணி தூபம் அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அந்த தீபச்சுடர் ஒளியில் வாராகி அம்மனை நாம் தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு அந்த தீப சுடரொளியை பார்க்கும் பொழுது “ஓம் வாராகி தாயே போற்று ஓம்” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும். பிறகு முழு மனதோடு வாராகி அம்மனையே வலம் வருவது போல் நினைத்து அந்த தீபத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வரும் பொழுதும் மேற்சொன்ன அந்த மந்திரத்தை கூறிக்கொண்டே வலம் வர வேண்டும். ஒன்பது முறை வலம் வந்த பிறகு திரும்பவும் தீபத்தில் வராகி அம்மனின் தரிசனத்தை காண வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு
வாராஹி அம்மனின் தரிசனத்தையும் வாராகி அம்மனின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு இந்த எளிமையான தீப வழிபாடு மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. முழுமனதோடு வழிபாடு செய்து முழு பலனையும் பெறலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.