நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பலவிதமான பாவங்களை செய்திருப்போம். அந்த பாவங்களின் விளைவால் நமக்கு தோஷங்கள் ஏற்பட்டிருக்கும். எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷத்தை நம்முடைய வாழ்க்கையில் இருந்து நீக்கக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது. எப்படி இந்த உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்ற சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டாரோ அதே போல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்த்து நமக்கு நல்வாழ்க்கையை அருள்வார். அப்படிப்பட்ட சிவபெருமானுக்குரிய தேய்பிறை பிரதோஷ நாளன்று வீட்டில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை பிரதோஷ தீப வழிபாடு
மறுபிறவிக்கு காரணமாக திகழ்வது நாம் செய்த கர்ம வினைகள் தான். அப்படிப்பட்ட கர்ம வினைகளை நீக்கி மறுபிறவி அற்ற நிலையை தரக்கூடியவராக தான் சிவபெருமான் திகழ்கிறார். சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான சிறப்பு மிகுந்த நாட்கள் இருந்தாலும் மாதத்தில் இரண்டு முறை வரக்கூடிய பிரதோஷம் அற்புதமான பலனை தரக்கூடியது. இந்த நாளில் யார் ஒருவர் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்கும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி புதன்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை பிரதோஷம் வருகிறது. இந்த நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். உடல் சூழ்நிலையின் காரணமாக விரதம் இருக்க இயலவில்லை என்பவர்கள் வழிபாட்டை மட்டுமாவது செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அல்லது காலை 9:15 லிருந்து 10 15 மணிக்குள் அல்லது மாலை நேரத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அல்லது மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9:30 மணிக்குள் செய்யலாம்.
வீட்டில் சிவபெருமானின் சொரூவமாக இருக்கக்கூடிய சிவலிங்கம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் போன்றவற்றிற்கு சுத்தமான பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அந்த தட்டில் ஐந்து அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வட்ட வடிவில் இருக்க வேண்டும். மேலும் இந்த தீபங்கள் அனைத்தும் உள்புறம் பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு வாசனை மிகுந்த மலர்களை அல்லது வில்வ இலைகளை வைத்து சிவபெருமானின் பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிவபெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று சிவபெருமானை மனதார வழிபாடு செய்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். நாம் ஏற்றி வைத்திருக்கும் இந்த தீபம் குறைந்தது 48 நிமிடங்கள் எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இயன்றவர்கள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்வது சிறப்பு.
மந்திரம்
” ஓம் சிவ சிவ சிவாய நம ஓம் “
இதையும் படிக்கலாமே: மனப்பிரச்சனை தீர்க்கும் பதிகம்
சிவபெருமானுக்குரிய அற்புதமான நாளாக திகழக்கூடிய பிரதோஷ நாள் புதன்கிழமையோடு சேர்ந்து வருவது என்பது மிகவும் சிறப்பு. இந்த நாளில் யார் ஒருவர் சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.