ரோட்டோர கடைகளில் கூட சில இடங்களில் தேங்காய்ப் பால் விற்பனைக்கு இருப்பதை நாம் பார்த்திருப்போம். சுட சுட டம்ளரில் ஊற்றி கொடுக்கும் பொழுது அதன் மணமே நமக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இந்த தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு நிகரான தன்மைகளை தன்னுள் அடக்கியுள்ளது. வாரம் ஒரு முறை இந்த தேங்காய்ப்பால் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் அதிகரிக்கும். உடல் வலிமை பெற எளிய முறையில் தேங்காய்ப் பாலை பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

‘தேங்காய் பால்’ செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – ஒரு கப், பொடித்த பனை வெல்லம் – ஒரு கப், ஏலக்காய் – 2, ஜாதிக்காய் – ஒன்று.
‘தேங்காய் பால்’ செய்முறை விளக்கம்:
சுடச்சுட ஆரோக்கியம் மிகுந்த இந்த தேங்காய் பால் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்கு துருவிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கும் போது தேங்காய் உடைய தோலும் சேர்ந்து தான் நமக்கு கிடைக்கும் ஆனால் துருவி கொள்ளும் பொழுது தேங்காய் தோல் இல்லாமல் நமக்கு தேங்காய்ப் பூ மட்டும் அழகாக கிடைக்கும். எனவே துருவி கொள்வது மிகவும் நல்லது.

துருவிய தேங்காய் பூக்களை மிக்ஸியில் போட்டு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை ஒரு சுத்தமான காட்டன் வெள்ளைத் துணியில் ஊற்றி பாத்திரத்தில் பிழிந்து கொள்ள வேண்டும். இது முதல் பால் எனவே இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக மீண்டும் அதே தேங்காயை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து எந்த அளவிற்கு பிழிய முடியுமோ, அந்த அளவிற்கு நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக எடுத்த இந்த தேங்காய் பாலுடன் தேவையான அளவிற்கு பொடித்து வைத்துள்ள பனை வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து தேங்காய் பாலை சுட வையுங்கள். தேங்காய்ப் பால் ஓரங்களில் நுரைத்து வரும் பொழுது நீங்கள் முதலில் எடுத்து வைத்துள்ள திக்கான தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய்ப் பாலை எப்பொழுதும் பொங்க விடக்கூடாது. தேங்காய் பால் நுரைத்து பொங்கினால் கெட்டுப் போய்விடும். மீண்டும் இதே போல ஓரங்களில் நுரை தட்ட ஆரம்பித்ததும் மிக்ஸி ஜாரில் பொடியாக்கி வைத்துள்ள ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய் இரண்டும் கலந்த தூள் இதனுடன் சேர்த்து கலந்து கொண்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்போது சுடச்சுட டம்ளரில் சுவையான தேங்காய்ப்பால் பரிமாற வேண்டியது தான். இதில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நம் உடலை வலிமையாக வைத்துக் கொள்ளும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நோய் தாக்குதல்களை குறைக்கும். இதில் இருக்கும் அற்புத சத்துக்கள் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கூறினாலும் தகும். எனவே உங்களால் முடிந்த பொழுது அடிக்கடி இதை செய்து சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாமே!