5 நிமிடத்தில் அதிக நேரம் கெட்டுப் போகாத சுவையான தேங்காய் துவையல் எளிதாக எப்படி செய்வது தெரியுமா?

coconut-thengai-thuvaiyal2
- Advertisement -

இட்லி, தோசைக்கு சட்னி அரைப்பதற்கு பதிலாக இது போல துவையல் வைத்து பாருங்கள், எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும், இந்த தேங்காய் துவையலுக்கு ஈடு இணையே இல்லை! அற்புதமான அதிக நேரம் கெட்டுப் போகாத இந்த தேங்காய் துவையல் எளிதாக எப்படி செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் காண இருக்கிறீர்கள்.

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – அரை மூடி, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், வர மிளகாய் – 5, புளி – பெரு நெல்லிக்காய் அளவு, கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு பற்கள் – 3, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காய் அரை மூடி அளவிற்கு உடைத்து துருவலாக பூ போல துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் வைத்துக் கொள்ளலாம். பிறகு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். சூடான எண்ணெய் காய்ந்ததும் அதில் வர மிளகாய்களை காம்பு நீக்காமல் அப்படியே சேர்த்து முதலில் வதக்கிக் கொள்ளுங்கள். லேசாக வரமிளகாய் உப்பி வர அதை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆறியவுடன் அதிலிருக்கும் காம்புகளை நீக்கி விடுங்கள். பின்பு அதே எண்ணெயில் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு பொன் நிறமாக பொறுமையாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களையும் சேர்த்து லேசாக வதக்கி எடுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பொன்னிறமாக உளுந்தம் பருப்பு மாறியதும் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக வதக்கி பின்னர் அதையும் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பெருங்காய கட்டி சேர்ப்பதாக இருந்தாலும் நீங்கள் லேசாக வாணலியில் வதக்கி விட்டு சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். தேங்காய் துருவல் ஈரப்பதம் நீங்கி நன்கு வறுபட வேண்டும். அது வரை பொறுமையாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விதைகள், நார் அனைத்தையும் சுத்தம் செய்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி அதை தனித்தனியாக உதிர்த்து தேங்காயுடன் சேர்த்து வதக்குங்கள். புளியை மொத்தமாக அப்படியே சேர்த்தால் ஆங்காங்கே அரை படாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு, எனவே இது போல சிறு சிறு துண்டுகளாக உதிர்த்து கொள்ளுங்கள். தேங்காய், புளி வறுபட்ட பின்பு அதையும் எடுத்து ஆற விட்டு விடுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்து வைத்துள்ள வர மிளகாய், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதில் தேங்காய் கலவை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொரகொரவென்று அரைத்து எடுக்க வேண்டும். ரொம்பவும் நைஸாக துவையல் அரைக்கக் கூடாது, அதன் சுவை மாறிவிடும். கெட்டியான பதத்திற்கு துவையல் வேண்டும், எனவே அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது, லேசாக தெளித்து தெளித்து துவையல் போல் அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின்பு அதற்கு கடுகு கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தாளித்து சேர்த்து சுடச்சுட சாதம், டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -