அரிசி சேர்க்காமல் இரட்டிப்பு ஆரோக்கியத்தை தரும் திணை முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?

adai
- Advertisement -

அரிசி சேர்க்க போவது கிடையாது. இந்த அடையை செய்ய திணை மற்றும் முருங்கைக் கீரையை சேர்த்து செய்யப் போவதால் இரட்டிப்பு ஆரோக்கியம் நமக்கு கிடைக்கப் போகின்றது. மிக மிக சுலபமான முறையில் ஆரோக்கியம் தரும் இந்த அடை ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. குழந்தைகள் சாப்பிடும் அளவிற்கு கூட இதன் ருசியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவதற்கு ஒரு டிப்ஸ் இந்த குறிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த ரெசிபியை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் திணை – 1 கப், கடலை பருப்பு – 1/2 கப், கருப்பு உளுந்து – 1/2 கப், துவரம் பருப்பு – 1/2 கப், இந்த அளவுகளில் எல்லா பொருட்களையும் போட்டு நன்றாக கழுவி விடுங்கள். அதன் பின்பு இதோடு 2 வர மிளகாய்களை சேர்த்து நல்ல தண்ணீரை ஊற்றி, 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக ஆட்டி எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். (கருப்பு உளுந்து இல்லை என்றால் வெள்ளை உளுந்தில் கூட இந்த அடை செய்யலாம். தவறு கிடையாது.)

- Advertisement -

அரைத்த இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி, கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், முருங்கைக்கீரை – 1 கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு, போட்டு மாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. அடை மாவு பக்குவத்தில் கொஞ்சம் திக்காகவே இருக்கட்டும்.

வழக்கம்போல தோசை கல்லை அடுப்பில் வைத்து அடை மாவை சிறிய வடிவத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். மெல்லிசாக தீட்ட முடியாது. கொஞ்சம் திக்காகத்தான் இந்த அடை நமக்கு கிடைக்கும். நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் மணக்க மணக்க தினை முருங்கைக்கீரை அடை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள வழக்கம் போல தேங்காய் சட்னி, கார சட்னி, எதை வேண்டும் என்றாலும் பரிமாறலாம். ஆனால் குழந்தைகள் கட்டாயமாக இந்த ரெசிபியை சாப்பிட கஷ்டப்படுவாங்க. அதுக்கு ஒரு சின்ன டிப்ஸ்.

- Advertisement -

சுடச்சுட இந்த அடையை தட்டில் போட்டுவிட்டு, மேலே வெண்ணெயை லேசாக தடவி, அதன் மேலே வெல்லத்தை துருவி விடுங்கள். அந்த சூட்டிலேயே வெல்லமும் வெண்ணெயும் சேர்ந்து இது இனிப்பாக சூப்பராக மாறிவிடும். அதாவது இனிப்பு போலி போல ஒரு சுவை நமக்கு கிடைக்கும்.

குழந்தைகளுக்கு இப்படி இனிப்பு சேர்த்து அடை சுட்டுக் கொடுங்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். ஒரு அடை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு ஆரோக்கியம் தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -